Loading...
தங்கத்தில் ரீனியம் வேதிப்பொருள் கலப்பா? வைரல் வீடியோ வதந்திக்கு சென்னை நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் விளக்கம்
வைரல் வீடியோ வதந்திக்கு சென்னை நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் விளக்கம்

தங்கத்தில் ரீனியம் வேதிப்பொருள் கலப்பா? வைரல் வீடியோ வதந்திக்கு சென்னை நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் விளக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 20, 2026
04:51 pm

செய்தி முன்னோட்டம்

தங்கத்தில் ரீனியம் என்ற வேதிப்பொருள் கலப்படம் செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் ரீனியம் பொடியைத் தங்கத்தில் கலந்தால் பரிசோதனை இயந்திரத்தால் கூட கண்டுபிடிக்க முடியாது என வதந்தி பரவியது. மேலும் இதனால் வாடிக்கையாளர்களுக்கு பவுனுக்கு ₹15,000 வரை நஷ்டம் ஏற்படும் என வீடியோக்களும் பகிரப்பட்டன. ஆனால் இத்தகவல்கள் முழுக்க முழுக்க பொய் என சென்னை வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி மறுத்துள்ளார். செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களை கொண்டு இவ்வாறு வதந்தி பரப்பப்படுவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

saaththiyamillai

உருகுநிலை வேறுபாட்டால் சாதாரண நகைப் பட்டறைகளில் ரீனியம் கலப்பது சாத்தியமற்றது

ரீனியம் என்பது விண்வெளித் தொழில் மற்றும் ஜெட் என்ஜின்கள் தயாரிப்பில் மட்டுமே பயன்படுத்தப்படும் அரசாங்கக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட அரிய உலோகமாகும்.

சுத்தமான தங்கத்தின் உருகுநிலை 1,064 டிகிரி செல்சியஸ் மட்டுமே உள்ள நிலையில் ரீனியத்தின் உருகுநிலை 3,186 டிகிரி செல்சியஸ் ஆகும்.

இவ்வளவு அதிக உருகுநிலை கொண்ட ரீனியத்தைச் சாதாரண நகைப் பட்டறைகளில் தங்கத்துடன் சேர்த்து உருக்கி சீரான கலவையாக மாற்றுவது சாத்தியமற்றது.

அப்படியே கலந்தாலும் தங்கத்திற்கு உரிய நெகிழ்வுத்தன்மை குறைந்து நகை எளிதில் உடையும் தன்மை கொண்டதாக மாறிவிடும் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

காரட் மீட்டர்

உரைகல் சோதனையில் தப்பினாலும் XRF காரட் மீட்டரில் 100% துல்லியமாகப் பிடிபடும்

ரீனியத்தின் அடர்த்தி 21.02 கிராம் ஆகவும் சுத்தமான தங்கத்தின் அடர்த்தி 19.32 கிராம் ஆகவும் நெருக்கமாக உள்ளன.

இதனால் பழைய உரைகல் சோதனை மற்றும் எடை சோதனைகளில் ரீனியம் கலப்படத்தைக் கண்டறிவது சற்று கடினமாக இருக்கலாம்.

ஆனால் தற்போது பெரும்பாலான நகைக்கடைகள் மற்றும் ஹால்மார்க் மையங்களில் நவீன காரட் மீட்டர் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த எச்ஆர்எஃப் காரட் மீட்டர் மூலம் பரிசோதித்தால் தங்கத்தில் ரீனியம் கலந்திருப்பது நூறு சதவீதம் துல்லியமாகத் தெரிந்துவிடும்.

ADVERTISEMENT

பொதுமக்களுக்கு அறிவுரை

6 இலக்க ஹால்மார்க் நகைகளை மட்டுமே வாங்கிப் பாதுகாப்பாக இருக்க பொதுமக்களுக்கு அறிவுரை

இந்த விவகாரம் ஒரு அறிவியல் ரீதியான சாத்தியக்கூறு மட்டுமே தவிர நடைமுறையில் நடக்கக்கூடிய மோசடி அல்ல எனச் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனவே தங்கம் வாங்கும் பொதுமக்கள் சமூக வலைதள வதந்திகளை நம்பி எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பழைய முறையில் உரைகல் தேய்த்துப் பார்த்துத் தங்கம் வாங்கும் இடங்களை வாடிக்கையாளர்கள் முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

எப்போதும் 6 இலக்க ஆல்பா-நியூமரிக் எண் கொண்ட ஹால்மார்க் நகைகளை மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் வாங்கிப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT