Loading...
பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் தீபாவளியன்று கனமழை: 10 செ.மீ. மழையை பதிவு செய்து சென்னை முதலிடம்
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது

பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் தீபாவளியன்று கனமழை: 10 செ.மீ. மழையை பதிவு செய்து சென்னை முதலிடம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 08, 2026
11:08 am

செய்தி முன்னோட்டம்

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளக் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் தீபாவளி தினத்தன்று கனமழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக வடசென்னை மற்றும் மத்திய சென்னையின் பல பகுதிகளில் அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. இதன்மூலம், தமிழகத்திலேயே அதிக மழைப்பொழிவை பெற்ற பகுதிகளின் பட்டியலில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தமிழ்நாடு வெதர் மேன்

"பல தசாப்தங்களுக்குப் பிறகு தீபாவளியில் 10 செ.மீ. மழை": பிரதீப் ஜான்

பிரபல வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னையில் தீபாவளி நாளில் 10 செ.மீ. (100 மி.மீ.) மழை பதிவாகி பல தசாப்தங்கள் ஆகிவிட்ட நிலையில், இந்த முறை காலை 8:30 மணிக்குள் 100 மி.மீ. மழையை சென்னை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் காலை 7 மணி நிலவரப்படி 72 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

இதன் மூலம் நடப்பு வடகிழக்குப் பருவமழைக்கான மொத்த மழையளவு 600 மி.மீ. என்ற இலக்கை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.

வடசென்னை மற்றும் மத்திய சென்னையில் வெளுத்து வாங்கிய மழை, தென்சென்னை பகுதிகளிலும் தொடர வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT