எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமான விவகாரம்: சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அபராதம்
சென்னையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மருத்துவமனை எம்.ஜி.எம். அமைந்தக்கரையில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையின் கிளை ஒன்று, ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட்மேரீஸ் சாலையில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானம், உரிய திட்ட அனுமதி இல்லாமல் மேற்கொண்ட வருவதாக எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு அபராதம் விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். அதோடு, உரிய அனுமதி வழங்காமல் காலதாமதம் செய்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை மாநகராட்சிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதமும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
எம்ஜிஎம் கட்டுமான விவகாரம் பற்றிய முன்கதை
அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனை, ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட்மேரீஸ் சாலையில் புதிதாக 10 மாடி கொண்ட மருத்துவமனையை கட்டி வருகிறது. இந்த கட்டுமானப் பணியில் ஆழ்துழாய் அஸ்திவாரம் அமைக்கும் போது, சுற்றுப்புற பகுதியில் கடுமையான ஒலி மாசு ஏற்படுகிறது என புகார் எழுப்பப்பட்டது. நள்ளிரவைத் தாண்டி அதிகாலையும் பணிகள் நடைபெறுவதாக மருத்துவமனை நிர்வாகத்திற்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியம், சி.எம்.டி.ஏ, காவல்துறைக்கும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உரிய அனுமதி வாங்காமல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட மருத்துவமனை நிர்வாகத்தின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.