நூதன முறையில் ஊசி மூலம் ரத்தத்தை வெளியேற்றி சென்னை அரசு மருத்துவர் தற்கொலை
சென்னை ஆழ்வார்பேட்டைபகுதியிலுள்ள டி.டி.கே.சாலையில், தனது தாய்மாமனின் சொந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மருத்துவர் கார்த்தி(42). இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில், உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார் என்று தெரிகிறது. மருத்துவரான இவரது தந்தை உலகநாதன், புதுச்சேரியில் வசித்து வருகிறார் என்றும், கார்த்தியின் தாய் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது. திருமணமான இவரது தங்கை தீபா அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், அவரும் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
பொதுசேவை செய்யும் நோக்கில் திருமணம் செய்து கொள்ளாத மருத்துவர்
இந்நிலையில், கார்த்தி, மக்களுக்கு பொதுசேவை செய்ய வேண்டும் என்னும் நோக்கில் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருந்துள்ளார். இதனிடையே கார்த்தி தினமும் தனது தங்கையுடன் செல்போனில் பேசுவது வழக்கமாம். ஆனால் அவர் கடந்த 2 நாட்களாக இவர் போன் செய்யவில்லை, அவரது தங்கை மற்றும் தந்தை தொடர்புக்கொண்ட பொழுதும் அவர் அழைப்பினை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த தீபா, தனது தோழி ஸ்ரீவித்யாவிடம் இது குறித்த விவரம் கூறி அவரை தனது அண்ணன் வீட்டிற்கு நேரில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த கார்த்தி
அதன்படி ஸ்ரீவித்யா, கார்த்தியின் வீட்டிற்கு சென்றப்பொழுது, வீடு திறந்தநிலையில் இருந்துள்ளது, கடுமையான துர்நாற்றமும் வீசியுள்ளது. அதனால் சந்தேகமடைந்த ஸ்ரீவித்யா உள்ளே அறைக்குள் சென்று பார்த்தப்பொழுது கார்த்தி நாற்காலியில் அமர்ந்து, கையில் ரத்தம் வெளியேறிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்ரீவித்யா உடனே தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துக்கொண்ட மருத்துவர்
அதன்பேரில், அங்கு விரைந்து வந்த போலீசார் கார்த்தியின் உடலை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். கார்த்தி, தனது இரு கைகளிலும் ட்ரிப்ஸ் போடும் ஊசி கொண்டு உடலில் உள்ள ரத்தத்தை வெளியேற்றி நூதன முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் அவர், 'என் வாழ்க்கை மிக அழகாக முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு யாரும் காரணமில்லை' என்று கடிதம் ஒன்றினையும் எழுதி வைத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது இதுகுறித்து தேனாம்பேட்டை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்தியின் தாய்மாமனிடமும், அவர் பணிபுரிந்த மருத்துவமனை வட்டாரங்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3 முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் மருத்துவர் கார்த்தி
தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் கார்த்தி கொரோனா காலத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்துள்ளார். அப்போது அவருக்கு 3 முறை கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். அதன்பின்னர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தான் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணம் பலருக்கு ஏற்படுகிறது. அத்தருணங்களில் நமது எண்ணத்தை திசைதிருப்பி கொள்ளவேண்டும். இது போன்ற தற்கொலைகளை தடுக்கும் பொருட்டு 'ஸ்னேகா தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன்' என்னும் 24 மணிநேர சேவை அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பினை 104 எண் கொண்டு தொடர்புக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.