சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்; காவல்துறை பலத்த பாதுகாப்பு
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், இதற்காக பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை பெருநகர காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள 1,524 சிலைகள் சனிக்கிழமை (செப்டம்பர் 14) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகின்றன. இந்த சிலைகளை எடுத்துச் செல்வதற்கு 17 வழித்தடங்களில் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இந்த சிலைகள் அனைத்தையும் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் என மொத்தம் 4 கடற்கரை பகுதிகளில் மட்டுமே கரைக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
அசம்பாவிதங்களை தவிர்க்க பாதுகாப்பு
விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக காவல்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்காக கமிஷனர் அருண் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் மற்றும் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் 16,500 காவலர்கள் மற்றும் 2,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலையை கரைக்கும் பகுதிகளில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி மையங்களையும் காவல்துறை அமைத்துள்ளது. கூடுதலாக, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், படகுகள் மற்றும் நீச்சல் தெரிந்த தன்னார்வலர்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது. காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.