தமிழக அரசின் வங்கி கணக்கிலிருந்து ரூ 22.30 கோடி சைபர் மோசடி: மணி மியூல் கும்பலை சேர்ந்த 7 பேர் கைது
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் ₹22 கோடியே 30 லட்சத்து 4 ஆயிரத்து 879 ரூபாய் ஆன்லைன் மூலம் முறைகேடாகப் பரிமாற்றம் செய்யப்பட்ட பிரம்மாண்ட சைபர் மோசடி வழக்கில், சென்னை, மதுரை, சிவகங்கை மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த 7 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கிராமப்புற ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 15-வது நிதிக்குழு மானிய நிதியை, அரசு அதிகாரிகளின் பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொற்களை முறைகேடாகப் பயன்படுத்தி 46 பரிவர்த்தனைகள் மூலமாக 25 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி இக்கும்பல் கைவரிசை காட்டியுள்ளது.
பாஸ்வேர்ட் திருட்டு
அதிகாரிகளின் பாஸ்வேர்டை திருடி அரங்கேறிய மோசடி
தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் கிராமப்புற சுகாதாரக் கட்டமைப்புகளுக்கான 15-வது நிதிக்குழு மானிய நிதி, சென்னை சி.ஐ.டி. நகர் எச்.டி.எஃப்.சி (HDFC) வங்கிக் கிளையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதனை இயக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்குப் (BDO) பிரத்யேகப் பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொல் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 12 முதல் 30-ஆம் தேதி வரை நாகப்பட்டினம் கீழையூர், இராமநாதபுரம் மண்டபம் மற்றும் திருப்பூர் தாராபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலர்களின் இணைய வங்கி விவரங்களைத் திருடிய சைபர் குற்றவாளிகள், 46 பரிவர்த்தனைகள் மூலம் ₹22.30 கோடி அரசு நிதியை 25 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்துள்ளனர்.
7 பேர் கைது
மணி மியூல் கும்பல் சிக்கியது எப்படி?
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை கண்காணிப்பாளர் ராம்பிரசாத் அளித்த புகாரின் பேரில், கடந்த நவம்பர் 3-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்த சென்னை சைபர் கிரைம் போலீஸார் பணப்பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தனர்.
இதில், கமிஷனுக்கு ஆசைப்பட்டு தனிநபர்களின் வங்கிக் கணக்குகளை வாங்கி அதன் மூலம் பணத்தைச் சுருட்டும் 'மணி மியூல்' முறையை இக்கும்பல் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
முதற்கட்டமாக சென்னை ஈக்காட்டுத்தாங்கல் செல்லபாண்டியன்(56), திருவல்லிக்கேணி கரும்பூர் அண்ணாதுரை(56) மற்றும் பெங்களூரு லோகநாதன்(65) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மதுரையைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான்(28), ஜெகதீஷ்(31) மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த அஷ்ரஃப் அலி, கண்ணதாசன் ஆகிய மேலும் 4 பேரைப் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
எச்சரிக்கை
காவல் ஆணையர் பாராட்டு
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 7 செல்போன்கள், 14 சிம் கார்டுகள் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டுக் கும்பல்களுக்கு இதில் தொடர்புள்ளதா என்பது குறித்தும், மோசடிப் பணத்தை மீட்கும் பணியிலும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இவ்வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட சைபர் கிரைம் குழுவினரைச் சென்னை பெருநகர காவல் ஆணையர் முனைவர் அ. அமல்ராஜ் பாராட்டினார்.
மேலும், அரசு அலுவலர்கள் தங்கள் இணைய வங்கி விவரங்களை ரகசியமாகப் பாதுகாத்து பல அடுக்கு பாதுகாப்பு வசதியைப் பயன்படுத்த வேண்டும் என்றும், கமிஷனுக்கு ஆசைப்பட்டு முன்பின் தெரியாதவர்களுக்கு வங்கிக் கணக்கு அல்லது சிம் கார்டுகளைக் கொடுப்பது கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என்றும் ஆணையர் எச்சரித்துள்ளார்.