டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ளூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் ஏற்கனவே 5 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்ததால், இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்படும் கூடுதல் குற்றப்பத்திரிகை இதுவாகும். ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பியான சஞ்சய் சிங், இந்த வழக்கு தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
ஆம் ஆத்மிக்கு தொடர்ந்து விழும் அடிகள்
டெல்லி மதுபானக் கொள்கை சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் சிங்கிடம் மத்திய புலனாய்வு அமைப்பினர் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய பின் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் தினேஷ் அரோரா, சஞ்சய் சிங்க்கு எதிராக 'அப்ருவராக' மாறியதால், சஞ்சய் சிங்கிடம் விசாரணை நடத்தப்பட்டது. சஞ்சய் சிங்க்கு, அரோரா இரண்டு முறை 1 கோடி ரூபாய்(மொத்தம் 2 கோடி) கொடுத்தது விசாரணையில் தெரியவந்ததாக அமலாக்கத்துறை ரிமாண்ட் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மியை சேர்ந்த ஒரு பெரும் தலைவர் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். இதற்குமுன், டெல்லி அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயினும், முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.