'ஜனநாயகத்தின் சாம்பியன்கள்': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி
மேற்கு வங்க பாஜகவின் க்ஷேத்ரிய பஞ்சாயத்து ராஜ் பரிஷத் நிகழ்ச்சியில் இன்று(ஆகஸ்ட் 12) வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை கிழித்தெறிந்தார். தோற்கடிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசிய பிரதமர், "நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது எதிர்க்கட்சிகள் வெறும் குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்வைக்கின்றன. எந்த லாஜிக்கும் இல்லாமல் பேசிக் கொண்டிருந்தார்கள்." என்று கூறினார். மணிப்பூரைப் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு விரும்பவில்லை என்றும், அதனால்தான் அவர்கள் மக்களவையில் எந்த லாஜிக்கும் இல்லாமல் பேசுகிறார்கள் என்றும் அவர் கூறினார். "பாஜக உறுப்பினர்கள் ஆணவம் எதுவும் இல்லாமல் உழைத்து மக்களின் இதயங்களை வெல்கிறார்கள்" என்றும் மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி கூறினார்.
'நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்களிக்க எதிர்க்கட்சிகள் பயந்தன'
க்ஷேத்ரிய பஞ்சாயத்து ராஜ் பரிஷத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்(EVM) தொடர்பாக எதிர்க்கட்சிகளை சாடினார். "ஜனநாயகத்தின் சாம்பியன்களாக தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் EVM ஐ அகற்ற சதி செய்கிறார்கள்" என்று பிரதமர் மோடி கூறினார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்தது குறித்தும் பிரதமர் மோடி பேசினார். "நாங்கள் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம். இந்தியாவில் எதிர்மறையான கருத்துக்களை பரப்புபவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தோம். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாதியிலேயே நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினர். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்களிக்க அவர்கள் பயந்தனர் என்பதுதான் உண்மை. வாக்களித்திருந்தால் 'கமந்தியா' கூட்டணியின் குட்டு அம்பலமாகியிருக்கும்'' என்றும் பிரதமர் மோடி கூறினார்.