ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றார் சம்பை சோரன்
ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதையடுத்து, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவர் சம்பை சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார். இவருடன், காங்கிரஸ் தலைவர் ஆலம்கிர் ஆலன் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) சத்யானந்த் போக்தாவும் அமைச்சர்களாக பதவியேற்றனர். முன்னதாக நேற்று கவர்னர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து, புதிய அரசாங்கத்தை அமைக்க தனக்கு அனுமதி அளிக்குமாறு கேட்டு கொண்டார். இதனை தொடர்ந்து இன்று பதவி ஏற்பு விழா நடந்தது. எனினும், இப்போது, சம்பை சோரனுக்கு ஒரு பெரிய சோதனை காத்திருக்கிறது. தற்போது அவர் சட்டசபையில் 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். எனினும், 43 எம்எல்ஏக்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை காவலில் ஹேமந்த் சோரன்
நிலமோசடி மற்றும் அது சார்ந்த பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்க இயக்குனரகத்தால் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஒரு நாள் நீதிமன்றக் காவலில் இருந்தார். இந்த கைது தொடர்பாகவும், பெயில் தொடர்பாகவும் இன்று உச்சநீதிமன்றத்தை நாடிய ஹேமந்த் சோரனின் மனுவை ஏற்க மறுத்தது உச்ச நீதிமன்றம். மாறாக ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு தெரிவித்தது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜேஎம்எம் செயல் தலைவருமான ஹேமந்த் சோரன் 5 நாள் ED காவலில் வைக்கப்பட்டுள்ளார்.