கடந்த நிதியாண்டில் வைப்பு நிதிக்கான வட்டியை வழங்கத் தொடங்கிய EPFO அமைப்பு.. சரிபார்ப்பது எப்படி?
செய்தி முன்னோட்டம்
கடந்த நிதியாண்டிற்கான (2022-23) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை செலுத்தத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது EPFO அமைப்பு.
வழங்கப்பட்ட வட்டித் தொகையை தொழிலாளர்கள் தங்களுடைய வைப்பு நிதி கணக்கில் சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.15% வட்டி வழங்கப்படுகிறது.
அனைத்து கணக்குகளுக்கும் படிப்படியாக வட்டி வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் அனைத்து கணக்குகளுக்கு வழங்கப்பட்டு விடும் எனவும் தெரிவித்திருக்கிறது அந்த அமைப்பு.
PF கணக்கில் வரவு வைக்கப்பட்ட வட்டியை EPFO இணையதளம் அல்லது உமாங் (UMANG) மொபைல் செயலியின் மூலம் தொழிலாளர்கள் சரிபார்த்துக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையம் அல்லது ஸ்மார்ட்போன் வசதி இல்லாதவர்கள் எஸ்எம்எஸ் மூலமாகவும் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
EPFO
சரிபார்ப்பது எப்படி?
வலைத்தளத்தில், EPFO இணையதளத்திற்குச் சென்று (இணையதளத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்), Services பிரிவில் For Employees என்பதனைத் தேர்ந்தெடுத்து, அதில் Employee Passbook என்பதனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் நமது UAN எண் மற்றும் கேப்சாவை உள்ளீடு செய்து EPF கணக்கை சரிபார்த்துக் கொள்ளலாம்.
உமாங் செயலியின் மூலம் சரிபார்க்க, உமாங் செயலியில் நம்முடைய மொபைல் மற்றும் OTP எண்ணை உள்ளீடு செய்து லாகின் செய்து கொள்ளவும். பின்னர் EPFO பிரிவில் நம்முடைய UAN எண் மற்றும் OTPயை உள்ளீடு செய்து PF கணக்கை அணுகலாம்.
எஸ்எம்எஸ் மூலம் 7738299899 என்ற எண்ணுக்கு 'EPFOHO UAN ENG' என்ற குறுஞ்செய்தியை அனுப்புவதன் மூலம் PF கணக்குத் தகவல்களைப் பெற முடியும்.