Page Loader
தலைமை நீதிபதியை தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் இருந்து நீக்க மசோதா தாக்கல்
தலைமை நீதிபதியை தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் இருந்து நீக்க மசோதா தாக்கல்

தலைமை நீதிபதியை தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் இருந்து நீக்க மசோதா தாக்கல்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 10, 2023
12:57 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளை நியமிக்கும் செயல்முறையில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்குவதற்கான மசோதாவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, மசோதா மாநிலங்களவையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) முன்வைக்கப்பட உள்ளது. இந்த மசோதாவின்படி, இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அமைச்சர் அடங்கிய குழுவின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவர். இந்தக் குழுவுக்கு பிரதமர் தலைமை தாங்குவார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

union govt ready to tussle with supreme court

உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் மசோதா

மத்திய அரசு தாக்கல் செய்யும் இந்த மசோதா, உச்ச நீதிமன்றத்தின் மார்ச் 2023 தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உச்சநீதிமன்றம் அப்போது வழங்கிய தீர்ப்பில், இதில் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் மற்றும் தேர்தல் ஆணையர்களின் நியமனம் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழுவின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் செய்யப்பட வேண்டும் எனக் கூறியிருந்தது. எனினும், பாராளுமன்றம் சட்டம் கொண்டு வரும் வரை மட்டுமே இந்த ஏற்பாடு தொடரும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பல விவகாரங்களில் மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே மோதல் நீடித்து வரும் சூழலில், இது மற்றொரு சர்ச்சைக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.