Page Loader
GST வலைப்பின்னலை பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய அரசு
GST வலைப்பின்னலை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய அரசு

GST வலைப்பின்னலை பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய அரசு

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 09, 2023
01:20 pm

செய்தி முன்னோட்டம்

ஜிஎஸ்டி வலைப்பின்னலை (GST Network), பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பை நேற்று (ஜூலை 8) வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. இதனைத் தொடர்ந்து இனி ஜிஎஸ்டி தொடர்பான பணமோசடிக் குற்றங்கள் குறித்து விசாரிக்க, அவை தொடர்பான தகவல்களை, ஜிஎஸ்டி வலைப்பின்னலானது அமலாக்கத்துறை மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அமைப்பான Financial Intelligent Unit (FIU) ஆகிய அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, CCI, ரிசர்வ் வங்கி, செபி மற்றும் IRDAI ஆகிய அமைப்புகளும் அமலாக்கத்துறை மற்றும் FIU அமைப்புகளுடன் தங்களிடம் உள்ள தகவல்களைப் பகிர்ந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி வலைப்பின்னல் என்றால் என்ன? 

ஜிஎஸ்டி வலைப்பின்னல் என்பது மத்திய, மாநில அரசுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஜிஎஸ்டி குறித்த தகவல்களை பதிவு செய்யும் மற்றும் சேமிக்கும் ஒரு தகவல் தொழில்நுட்ப அமைப்பாக இருந்து வருகிறது. ஜிஎஸ்டியில் புதிய பதிவுகளை சேர்ப்பது முதல், வரி செலுத்துபவர்களின் சுயவிவரங்களை நிர்வகிப்பது மற்றும் ஜிஎஸ்டி வரி தொடர்பான ஆவணங்களைச் சரிபார்ப்பது வரை அனைத்து சேவைகளையும் கவனித்து வருகிறது இந்த ஜிஎஸ்டிஎன் அமைப்பு. ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்படும் குற்றங்களான, பொய்யாக வரி செலுத்தியதற்கான ஆதாரத்தை உருவாக்குவது மற்றும் பொய்யான விலைப்பட்டியலை சமர்ப்பிப்பது உள்ளிட்ட குற்றங்கள் அனைத்தும் இனி பணமோசடிச் சட்டத்தின் கீழேயே பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.