லோக்கல் இரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை! அக்டோபர் 1 முதல் ஐடி கார்டு கட்டாயம்: மத்திய இரயில்வே
செய்தி முன்னோட்டம்
மும்பை புறநகர் மற்றும் மத்திய ரயில்வே மண்டலம் முழுவதும் பயணிக்கும் பயணிகள் அக்டோபர் 1 முதல் 31 வரை தங்களது அசல் அடையாள அட்டைகளை (ID) தவறாமல் கையில் வைத்திருக்க வேண்டும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்வே வருவாய் இழப்பைத் தடுப்பது, போலி டிக்கெட்டுகளை ஒழிப்பது மற்றும் சலுகை கட்டணத் துஷ்பிரயோகங்களைத் தடுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, அக்டோபர் மாதம் முழுவதும் இந்த தீவிர டிக்கெட் பரிசோதனை பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாஸ் மூலம் பயணிப்போரின் டிக்கெட்டுகள் தீவிரமாக பரிசீலிக்கப்படும்.
கெடுபிடி
இ-பாஸ் மற்றும் PTO பயனர்களுக்குக் கெடுபிடி
ஒரே டிக்கெட்டில் பலர் பயணிக்கும் போது, அக்குழுவில் உள்ள குறைந்தது ஒருவராவது தகுதியான அசல் அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில், அக்குழுவில் உள்ள அனைவருமே 'டிக்கெட் இல்லாத பயணிகள்' எனக் கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
இரயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்படுத்தும் இ-பாஸ் மற்றும் சலுகைக் கட்டண சீட்டுகளுக்கு (PTO) புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இ-பாஸ் மூலம் பயணிக்கும் ஊழியர்கள் தங்களது அசல் அடையாள அட்டையைக் கையில் வைத்திருக்க வேண்டும்.
பாஸ்களைப் பயணத்திற்கு முன்னதாக 'பயண அதிகாரச் சான்றாக' முறையாக மாற்ற வேண்டும். இதில் தவறும் ஊழியர்களுக்கும் சாதாரணப் பயணிகளுக்கு இணையான அபராதம் விதிக்கப்படும்.
TTE App
முன்பதிவில்லா டிக்கெட்டுகள் மற்றும் TTE ஆப்
முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளும் இந்த தணிக்கையின் போது தீவிரமாக ஆய்வு செய்யப்படும்.
சந்தேகத்திற்குரிய டிக்கெட்டுகளை சரிபார்க்க டிக்கெட் பரிசோதனை அதிகாரிகளுக்கு (TTE) பிரத்யேக ஆப் (TTE App) வழங்கப்பட்டுள்ளது.
எனவே, அக்டோபர் 1 முதல் பயணிகள் அனைவரும் தங்களது அசல் அடையாள அட்டைகளான ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மறக்காமல் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.