மத்திய ஆயுத போலீஸ் படைகளுக்கு புதிய சீருடைகள் அறிவிப்பு
தனியார் படைகளில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் விரைவில், மத்திய ஆயுதப்படை போலீஸாருக்கு புதிய சீருடை மாற்றப்பட இருக்கிறது. இந்த சீருடைகளின் டிஜிட்டல் வடிவமைப்புகள் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட நிலையில், மத்திய ஆயுதப்படைகள் தங்கள் முக்கிய சீருடைகளை படிப்படியாக மாற்றும் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், அடுத்த சில மாதங்களில், டிஜிட்டல் பிரிண்டிங் மூலம் மற்ற சிறப்புப் பிரிவுகளின் சீருடைகளும் மாற்றப்பட இருக்கிறது. இதனால், மூன்றாம் தரப்பினர் தங்கள் சீருடையை 'காப்பி' அடிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு, இந்திய இராணுவம் டிஜிட்டல் பிரிண்ட் சீருடைகளை அறிமுகப்படுத்தியது. இந்த சீருடைகளுக்கான பதிப்புரிமையை பெறவும் இந்திய இராணுவம் முயற்சித்து வருகிறது.
டிஜிட்டல் பிரிண்ட் சீருடைகளை முதலில் CRPF பயன்படுத்தவுள்ளது
இந்திய இராணுவத்தின் அந்த சீருடை NIFT ஆல் உருவாக்கப்பட்டதாகும். படைகளின் தேவைகளுக்கு ஏற்ப இந்த சீருடைகள் தயாரிக்கப்படுவதாகவும், அதே நேரத்தில் உலகளாவிய முறைகளை உள்துறை அமைச்சக அதிகாரிகள் பின்பற்றுவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த டிஜிட்டல் பிரிண்ட்களை 'காப்பி' அடிப்பது கடினம் என்று சீருடைகளை அங்கீகரித்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சீருடைகளை 'காப்பி' அடிப்பதற்கு பல்வேறு வண்ணங்களில் பிக்சலேட்டட் செய்யப்பட்ட வெவ்வேறு விதமான வடிவமைப்பு வடிவங்கள் தேவைப்படுகின்றன. அதனால், இந்த சீருடைகளை வேறு எந்த தனியார் நிறுவனங்களாலும் தயாரிக்க முடியாது என்று கூறப்படுகிறது. இந்த வகையான டிஜிட்டல் பிரிண்ட் சீருடைகளை முதலில் CRPF பயன்படுத்தவுள்ளது. விரைவில் மீதமுள்ள படைகளும் இதை பின்பற்றும்.