காவிரி விவகாரம் - செப்.26ல் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்திற்கு காவிரி நதிநீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்டவைகளில் தமிழகம் முறையிட்டது.
அதனையடுத்து, தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இதனை ஏற்க மறுத்த கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஆனால், காவிரி மேலாண்மை உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது என்றும், காவிரி மேலாண்மை மற்றும் ஒழுங்காற்று குழுவின் உத்தரவுகளை அமல்படுத்துமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடந்த 21ம்தேதி உத்தரவிட்டனர்.
இதனிடையே, காவிரியிலிருந்து சொற்ப அளவிலான நீரினை கூட தமிழகத்திற்கு திறந்துவிடக்கூடாது என்று கர்நாடக விவசாயிகள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
போராட்டம்
பெங்களூரில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பதற்றம்
மண்டியா, சாம்ராஜ்நகர், மைசூர் மற்றும் தமிழ்நாடு-கர்நாடகா எல்லை பகுதிகளில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
இதற்கிடையே, பெங்களூருக்கு காவிரிநீர் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், அம்மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று கூறி, நேற்று(செப்.,23)மண்டியா விவசாயிகள் பெங்களூருக்கு நீரேற்றும் நிலையத்திற்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து தற்போது வரும் 26ம் தேதி பெங்களூரில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பெங்களூர் டவுன் ஹாலிலிருந்து மைசூர் வங்கி வரையிலான பேரணியினை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு கர்நாடகா சினிமாவுலகம், சினிமா வர்த்தகச்சபை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பெங்களூரில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.