பலத்த மழை காரணமாக ராஜ்கோட் விமான நிலைய முனையத்தின் கூரை உடைந்து விழுந்தது
டெல்லி விமான நிலைய கூரை நேற்று இடிந்து விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது குஜராத்தின் ராஜ்கோட் விமான நிலைய முனையத்தில் உள்ள கூரை உடைந்து விழுந்துள்ளது. யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விதானம் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர். விமான நிலையத்தின் முனையத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் பயணிகள் பிக்அப் மற்றும் டிராப் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
தெற்கு குஜராத்திற்கு 'மஞ்சள் எச்சரிக்கை'
டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1 இல் இதேபோன்ற ஒரு சம்பவம் நேற்று நடந்தது. அதில் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக மழை காரணமாக இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தெற்கு குஜராத்தில் ஒரு சூறாவளி சுழற்சி செயலில் உள்ளதாகவும், அம்மாநிலத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை அலுவலகம் நேற்று கூறி இருந்தது அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று, இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெற்கு குஜராத்திற்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடுத்துள்ளது.