
புகழ்பெற்ற மராத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங்கின் மரணம் தொடர்பாக NRI கைது
செய்தி முன்னோட்டம்
புகழ்பெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங்கின் மரணம் தொடர்பாக பஞ்சாப் காவல்துறை, அமிர்த்பால் சிங் தில்லான் என்ற 30 வயது NRI ஒருவரை கைது செய்துள்ளது. 114 வயது தடகள வீரரின் உயிரைப் பறித்த சம்பவம் நடந்த 30 மணி நேரத்திற்குள் இந்த கைதும், சம்பந்தப்பட்ட ஃபார்ச்சூனர் SUV கைப்பற்றலும் நடந்துள்ளது. ஜலந்தரின் கர்தார்பூரில் உள்ள தாசுபூர் கிராமத்தைச் சேர்ந்த தில்லான், செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டு, தற்போது போக்பூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், போலீஸ் காவலில் எடுக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணை
குற்றவாளியை எப்படி போலீசார் நெருங்கினர்?
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் பட்டியலை அதிகாரிகள் தொகுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலையில், அதிகாரிகள் ஒரு ஃபார்ச்சூனர் எஸ்யூவியை அடையாளம் கண்டனர். ஆரம்பகட்ட விசாரணையில், அந்த வாகனம் கபுர்தலாவைச் சேர்ந்த வரீந்தர் சிங் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. ஜலந்தர் காவல் குழுக்கள் உடனடியாக கபுர்தலா சென்று வரீந்தர் சிங்கிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, கனடாவிலிருந்து சமீபத்தில் திரும்பிய அமிர்த்பால் சிங் தில்லான் என்ற வெளிநாட்டு இந்தியருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காரை விற்றுவிட்டதாக வரீந்தர் தெரிவித்தார்.
ஒப்புதல்
விபத்து ஏற்படுத்தியதை ஒப்புக்கொண்ட தில்லான்
முதற்கட்ட விசாரணையின் போது, தில்லான் தனது தொடர்பை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. முகேரியனில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, பயாஸ் பிண்ட் அருகே ஒரு முதியவரை தனது வாகனம் மோதியதாகக் கூறினார். பாதிக்கப்பட்டவர் ஃபௌஜா சிங் என்பது அப்போது தனக்குத் தெரியாது என்றும், செய்தி அறிக்கைகள் மூலம் மட்டுமே மராத்தான் வீரரின் மரணம் குறித்து தனக்குத் தெரிந்ததாகவும் தில்லான் கூறினார். "Turbaned Tornado" என்று அன்பாக அழைக்கப்படும் ஃபௌஜா சிங், திங்கட்கிழமை ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான பயாஸில் நடைப்பயணத்திற்குச் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார்.