கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் லாண்டாவை பயங்கரவாதியாக அறிவித்தது உள்துறை அமைச்சகம்
கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் லாண்டாவை பயங்கரவாதியாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. காலிஸ்தான் குழுவான பாபர் கல்சா இன்டர்நேஷனலைச்(பிகேஐ) சேர்ந்த கனட நாட்டு ரவுடி லக்பீர் சிங் லாண்டா(33), 2021இல் நடந்த பஞ்சாப் போலீஸ் உளவுத்துறை தலைமையக தாக்குதலைத் திட்டமிட்டமிட்டவர்களுள் ஒருவர் ஆவார். அது போக, 2022 டிசம்பரில் டார்ன் தரனில் உள்ள சர்ஹாலி காவல் நிலையத்தில் நடந்த ஆர்பிஜி தாக்குதல் உட்பட பிற பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடர்பாகவும் லாண்டாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ரவுடி லக்பீர் சிங் லாண்டா பஞ்சாப்பைச் சேர்ந்தவர் ஆவார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் கனடாவில் வசித்து வருகிறார்.
லாண்டா தொடர்புடைய 48 இடங்களில் சோதனை
அவர் தற்போது இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பரில், லக்பீர் சிங் லாண்டாவின் நெருங்கிய கூட்டாளிகளுடன் தொடர்புடைய 48 இடங்களில் பஞ்சாப் போலீசார் சோதனை நடத்தினர். கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி வர்த்தகர் ஒருவரை இரண்டு ஆசாமிகள் தாக்கியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. லாண்டா ஹரிகே என்று கூறி 15 லட்சம் ரூபாய் கேட்ட ஒருவரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக அந்த வர்த்தகர் அப்போது கூறியிருந்தார். அந்த சோதனையைத் தொடர்ந்து சிலர் கைது செய்யப்பட்டனர்.