பழனி முருகன் கோயிலில் நாளை முதல் மொபைல் போன், கேமராக்களுக்கு தடை
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது பழனி முருகன் கோயில். இந்த கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அப்படி வருகை தரும் பக்தர்களுள் சிலர் ஆகமவிதிகளை மீறி, கருவறையில் உள்ள நவபாஷண மூலவரை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து இணையத்தில் பரப்புவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. சில தினங்களுக்கு முன்னர் கூட, ஒரு இளம்பெண் மொபைல் போனில் கருவறையினை புகைப்படம் எடுக்க முயன்ற பொழுது, ஊழியர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தி வெளியேற்றினார். அந்த கோயில் ஊழியர் மீது அப்பெண்ணின் தந்தை பொய்யான புகாரினை அளித்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதனிடையே, பழனி கோயிலுக்குள் மொபைல் போன் எடுத்து செல்வது குறித்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
மொபைல் போன்களை பத்திரப்படுத்த பாதுகாப்பு மையங்கள் அமைப்பு
அதன்படி, வரும் அக்டோபர்.,1ம் தேதி முதல் பழனி மலைக்கோயிலுக்குள் மொபைல் போன் எடுத்து செல்வதற்கு தடை விதித்து நடவடிக்கை எடுப்பதாக கோயில் நிர்வாகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், இத்தடையானது நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக எடுத்துவரும் நிர்வாகம், பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் புகைப்படம் எடுக்கும் எந்தவொரு சாதனங்களையும் எடுத்துவரக்கூடாது என்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும், பக்தர்களின் மொபைல் போன்களை மலையடிவாரத்திலேயே பத்திரப்படுத்தி வைக்க, பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், ஒரு மொபைல் போனிற்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இத்தடைகளையும் மீறி கோயிலுக்குள் போன்களை எடுத்து வந்தால் போன்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.