LOADING...
இந்திய ரயில்வேயில் தண்ணீர் பிரச்சினைக்கு மட்டும் ஒரு நிதியாண்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள்; சிஏஜி அறிக்கை
ரயில்வேயில் தண்ணீர் பிரச்சினைக்கு மட்டும் ஒரு நிதியாண்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள்

இந்திய ரயில்வேயில் தண்ணீர் பிரச்சினைக்கு மட்டும் ஒரு நிதியாண்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள்; சிஏஜி அறிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 21, 2025
10:23 am

செய்தி முன்னோட்டம்

இந்திய ரயில்வேயில் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த சிஏஜியின் சமீபத்திய அறிக்கை, பல முக்கிய குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. 2018-19 முதல் 2022-23 வரையிலான நிதியாண்டுகளுக்கான தணிக்கையில், 2022-23 நிதியாண்டில் மட்டும் ரயில்களின் கழிப்பறைகள் மற்றும் வாஷ்பேஸின்களில் தண்ணீர் இல்லாதது குறித்து 1,00,280 புகார்கள் பதிவாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை, இந்த புகார்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவை தீர்க்கப்பட, எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 28 நிலையங்களில் விரைவு நீர் நிரப்புதல் (QWA) வசதிகளை நிறுவுவதில் நான்கு ஆண்டுகள் வரை தாமதம் ஏற்பட்டதையும் தணிக்கை சுட்டிக்காட்டியது.

பட்ஜெட்

தூய்மை நடவடிக்கைகளுக்கான செலவு அதிகரிப்பு

புகார்களை தீர்ப்பதில் மெத்தனப்போக்கு இருப்பினும், ரயில்வேயின் தூய்மை நடவடிக்கைகளுக்கான செலவினங்கள் அதன் பட்ஜெட் ஒதுக்கீட்டைத் தாண்டியுள்ளது. இது நிதி பயன்பாட்டில் உள்ள திறமையின்மையைக் காட்டுகிறது. சிஏஜியின் கண்டுபிடிப்புகள், தானியங்கி துப்புரவு அமைப்புகளின் செயல்திறனையும் ஆராய்ந்தன. தானியங்கி கோச் துப்புரவு ஆலைகள் (ACWP) முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்று அறிக்கை குறிப்பிட்டது. மேலும், கிளீன் ட்ரெய்ன் ஸ்டேஷன்ஸ் திட்டம் அதன் நோக்கங்களை அடையவில்லை என விமர்சித்தது. ஆய்வுகளின்போது, கழிப்பறைகள் குறைவான அளவில் மட்டுமே சுத்தம் செய்யப்பட்டதாகவும், பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களின் பற்றாக்குறை இருந்ததாகவும் அறிக்கை தெரிவித்தது. பயணிகளிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், ரயிலில் பராமரிப்பு சேவைகள் குறித்த திருப்தி மேம்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த அறிக்கை இந்திய ரயில்வே சுகாதாரம் மற்றும் தூய்மை நடைமுறைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.