
ஆபரேஷன் சிந்தூரில் துணிச்சலாக செயல்பட்ட 16 எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கேலன்டரி விருது அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானுடனான இந்தியாவின் மேற்கு எல்லையில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது விதிவிலக்கான துணிச்சலுடன் செயல்பட்டதற்காக 16 எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) பணியாளர்களுக்கு கேலன்டரி விருதுகள் வீரதீர பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மே 7 முதல் 10 வரை நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட பதிலடித் தாக்குதலாகும். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், விருது பெற்றவர்களை இந்தியாவின் முதல் பாதுகாப்பு வரிசை என்று குறிப்பிட்டு எல்லை பாதுகாப்புப் படை பாராட்டியது.
வீர தீர பதக்கங்கள்
வீர தீர பதக்கங்கள் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
உயிர்களைக் காப்பாற்றுதல், சொத்துக்களைப் பாதுகாத்தல், குற்றங்களைத் தடுத்தல் அல்லது குற்றவாளிகளைப் பிடித்தல் போன்ற அரிய மற்றும் வெளிப்படையான துணிச்சலான செயல்களுக்காக வீரதீரப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இந்த சுதந்திர தினத்தன்று, காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை, சிவில் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தப் பணிகளைச் சேர்ந்த மொத்தம் 1,090 பணியாளர்களுக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்களில், 233 பேருக்கு வீரதீரப் பதக்கமும், 99 பேருக்கு ஜனாதிபதியின் சிறப்பு சேவைக்கான பதக்கமும், 758 பேருக்கு சிறப்பான சேவைக்கான பதக்கமும் வழங்கப்பட்டன. குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 152 வீரதீர விருதுகளும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் பணியாளர்களில் 54 பேருக்கும், பிற பிராந்தியங்களில் 27 பேருக்கும் வீரதீரப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.