இந்தியா, கனடா விசா சேவைகள் 'மறுஅறிவிப்பு' வரும்வரை நிறுத்தப்பட்டுள்ளன
கனடாவில், இந்திய விசா சேவைகள் "செயல்பாட்டு காரணங்களுக்காக" மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிஸ்தான் சீக்கியர்களுக்கு தலைவராக கருதப்படும் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசாங்க ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக கனடா அரசு குற்றம் சாட்டிய நிலையில், இன்று மேலும் ஒரு பிரிவினைவாதி, கொல்லப்பட்டுள்ளார். அதே போல, இந்தியாவிற்கு பயணத்திட்டம் வைத்திருந்தால், கவனமாக இருக்க வேண்டும் எனவும் கனடிய அரசு அறிவுறுத்தியது. அதேபோல, இந்தியாவும், கனடாவில் உள்ள இந்திய பிரஜைகளை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியது. பலத்த கண்டனங்களை ஈர்த்த இந்த அறிவிப்புகளை தொடர்ந்து, தற்போது, கனடாவில் உள்ள இந்திய தூதரகம், இந்தியாவிற்கான விசா சேவைகளை நிறுத்தியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விசா சேவைகள் நிறுத்தம்
இந்தியா மற்றும் பிற நாடுகளின் விண்ணப்பங்களைக் கையாளும் ஆன்லைன் விசா விண்ணப்ப மையமான BLS இன்டர்நேஷனல் வெளியிட்ட அறிவிப்புபடி: "செயல்பாட்டுக் காரணங்களால், இந்திய விசா சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. தயவுசெய்து மேலும் புதுப்பிப்புகளுக்கு BLS இணையதளத்தை தொடர்ந்து பார்க்கவும். செப்டம்பர் 21, 2023 இந்த உத்தரவு முதல் நடைமுறைக்கு வருகிறது". அதேபோல, இந்தியாவில் செயல்படும் கனடிய தூதரகமும் தன்னுடைய செயல்பாடுகளை, 'அட்குறைப்பு' காரணமாக நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.