காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதாக கூறி உயர்மட்ட இந்திய அதிகாரியை வெளியேற்றியது கனடா
கடந்த ஜூன் மாதம் உயிரிழந்த காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது. இதனையடுத்து, ஒட்டாவாவில் உள்ள புது டெல்லியின் உளவுத்துறைத் தலைவரை கனடா வெளியேற்றியது. இந்த நடவடிக்கையால், ஏற்கனவே பதட்ட நிலையில் இருந்த இந்திய-கனடா உறவு மேலும் மோசமாகியுள்ளது. ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில், காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்யும் "நம்பகமான குற்றச்சாட்டுகள்" இருப்பதாக கனட நாடாளுமன்ற அமர்வின் போது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் .
குற்றச்சாட்டை தெளிவுபடுத்த இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தது கனடா
மேலும், இந்த விஷயத்தை தெளிவுபடுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு இந்திய அரசாங்கத்திற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்ததும் ட்ரூடோ அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார். "இன்று நாங்கள் கனடாவில் இருந்து மூத்த இந்திய தூதர் ஒருவரை வெளியேற்றியுள்ளோம்," என்று அந்த அதிகாரியின் பெயரை குறிப்பிடாமல் மெலனி ஜோலி பேசி இருக்கிறார். வெளியேற்றப்பட்ட இந்தியர், கனடாவில் உள்ள இந்தியாவின் வெளிநாட்டு உளவு நிறுவனமான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின்(RAW) தலைவர் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரித்தது இந்தியா
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு குறித்த கனேடிய அரசின் குற்றச்சாட்டை மத்திய அரசு முற்றிலுமாக நிராகரித்துள்ளது. கனடாவின் குற்றச்சாட்டுகள் "அபத்தமானது மற்றும் உள்நோக்கம்" உள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. "கனேடியப் பிரதமரின் அறிக்கையையும், அவர்களின் வெளியுறவு அமைச்சரின் அறிக்கையையும் நாங்கள் நிராகரிக்கிறோம். கனடாவில் வன்முறைச் செயலில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் அபத்தமானது மற்றும் உள்நோக்கம் கொண்டது" என்று இந்திய வெளியுறவு அமைச்சகம்(MEA) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு, "கனேடிய பிரதமர் நம் பிரதமரிடம் இதே போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார், அவை முற்றிலும் நிராகரிக்கப்பட்டன." என்று தெரிவித்துள்ளது. மேலும், "சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு அரசியலை நாங்கள் நடத்துகிறோம்" என்றும் இந்தியா கூறியுள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை
ஹர்தீப் சிங் நிஜ்ஜாரும் காலிஸ்தான் பயங்கரவாதமும்
இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் , வான்கூவரின் புறநகர்ப் பகுதியான சர்ரேயில் ஜூன்-18ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தியதாக நிஜ்ஜார் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர் கொல்லப்பட்டதில் இருந்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தொடர்ந்து இந்திய அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து வந்தனர் என்பது குறிப்பிடதக்கது. இந்தியாவில் இருந்து சீக்கியர்களுக்கென ஒரு தனி நாட்டை பிரிக்க வேண்டும் என்று கூறி இந்தியாவுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் எதிராக செயல்படுபவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்