2வது நாளாக திருச்சியிலுள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்
திருச்சியில் உள்ள பல பள்ளிகளுக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. நேற்று 9 இடங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் இன்று நகரத்தின் உள்ளே உள்ள 5 பள்ளிகள், ஒரு கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருச்சி மாநகர காவல் துறையினர், வெடிகுண்டு செயலிழக்கப் படைகள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு முழுமையாக சோதனையிட்டு வெடிகுண்டு எதுவுமில்லை என உறுதி செய்தனர். எனினும் இந்த மின்னஞ்சல் அனுப்பியது யார் என சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Twitter Post
Twitter Post
தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. தற்போது வரை அந்த மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியது யார் என காவல்துறையினர் கண்டுபிடித்ததாக தெரியவில்லை. அதனைத்தொடர்ந்து டெல்லி, குர்கான்-இல் உள்ள பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. பள்ளி, கல்லூரிகளைதாண்டி, கடந்த மாதம் நடந்த மற்றொரு சம்பவத்தில், பெங்களூரில் உள்ள தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டலுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதேபோல பிராங்பேர்ட்டுக்கு புறப்பட்ட விஸ்டாரா விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமானம் துருக்கிக்கு திருப்பி விடப்பட்டது.