ஹத்ராஸ்: மக்கள் நசுக்கப்பட்டாலும் போலே பாபா 'முதலில் வெளியேற' அனுமதி; FIR-இல் மாயமான பாபா பெயர்
ஜூன் 2 அன்று, உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே நடைபெற்ற ஒரு மதக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக பலர் மூச்சு முட்டியும், ஒருவர் மீது ஒருவர் விழுந்து மிதிபட்டு உதை பட்டு, ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 250க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சத்சங்கத்தை நடத்திய மதபோதகரின் காலடி மண்ணை எடுப்பதற்கு அடித்துபிடித்து விரைந்தபோது ஏற்பட்ட நெரிசலில், பலர் அங்கிருந்த சகதியில் வழுக்கி விழுந்தனர். அவர்கள் எழும் முன்னர் பலரும் ஒருவர் மீது ஒருவர் வழுக்கி விழுகவே, மூச்சு திணறி இறப்பு ஏற்பட்டதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். எனினும், தனது பக்தர்களின் நிலை பற்றி சிறிது கவலை படாமல், போலே பாபா என்று அழைக்கப்படும் மதபோதகர் கிளம்பியது பற்றியும் அவர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
பக்தர்களை பாதுகாக்காத பாபாஜியின் பாதுகாவலர்கள்
நேற்று மதியம் 2 மணியளவில் சத்சங்கம் நிறைவடைந்ததும், பாபாஜி தனது வாகனத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, இரு பக்கங்களில் இருந்தும் மக்கள் பாபாஜியின் கால்களில் இருந்து கால்மண்ணை சேகரிக்க விரைந்தனர். ஆனால், பாபாவின் தனிப்பட்ட பாதுகாப்பு படையினர்('சேவதார்' என்றும் அழைக்கப்படும்), மக்கள் விழுவதை பற்றி கவலைப்படாமல்,அவர்கள் வெளியேறுவதற்கான வழியை தடுத்து, பாபாவை பாதுகாப்பாக வெளியேற்றுவதை மட்டுமே நோக்கமாக செயல்பட்டனர் என கூறப்படுகிறது. "கூட்டம் குவிந்து கிடப்பதாலும், அதிக ஈரப்பதம் உள்ளதால் மூச்சு விட முடியாமல் தவித்ததாலும், நாங்கள் செல்ல அனுமதிக்குமாறு அவர்களிடம் கெஞ்சினோம். 'முதலில் பாபா செல்வார், பிறகு அவரைப் பின்பற்றுபவர்கள் செல்லலாம்' எனக்கூறிவிட்டார்கள்" என்று பாதிக்கப்பட்டவர் கூறினார் என்று பாதிக்கப்பட்டவர் கூறினார் என ஃபர்ஸ்ட் போஸ்ட் தெரிவித்துள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் விடுபட்ட பாபா பெயர்
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் பதிவுசெய்த எஃப்ஐஆர்-படி, சுமார் 2.5 லட்சம் பேர் இந்த நிகழ்விற்கு கூடியிருந்தனர், அதில் 80,000 பேர் மட்டுமே அனுமதி தரப்பட்டிருந்தது. நியூஸ் 18 இன் படி, விழா அமைப்பாளர்கள் ஆதாரங்களை அழித்ததாகவும், கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவத் தவறியதாகவும் FIR குற்றம் சாட்டுகிறது. எனினும், இதில் மதபோதகர் பெயர் விடுபட்டிருப்பது குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளது. எஃப்ஐஆரில், 'முக்கிய சேவதர்' (முக்கிய அமைப்பாளர்) தேவ்பிரகாஷ் மதுகர் மற்றும் பிற அமைப்பாளர்கள் மட்டுமே பெயரிடப்பட்டுள்ளனர் என்று மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி PTI செய்தி வெளியிட்டுள்ளது. இன்று காலை சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த சம்பவத்தில் தொடர்புள்ள அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.