மதுரை உணவகத்தில் பார்சல் உணவில் பிளேடு கிடந்ததாக புகார் - அதிகாரிகள் விசாரணை
மதுரை மாவட்டம் சோலையழகுபுரம் பகுதியில் வசித்து வரும் ஒருவர் மதிய உணவிற்கு, ஜெய்ஹிந்த்புரம் பகுதியிலுள்ள உணவகத்தில் சாப்பாடு பார்சல் வாங்கியுள்ளார். அதனை வீட்டுக்கு கொண்டு சென்று சாப்பிட பிரித்த பொழுது, சாப்பாட்டில் பாதி உடைந்த பிளேடு துண்டு ஒன்று கிடந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனே அந்த உணவகத்திற்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் இது குறித்து கூறி கேள்வியெழுப்பியுள்ளார். இந்த விவகாரம் பெரும் வாக்குவாதமாக மாறியதாக, அங்கிருந்த மக்கள் குறிப்பிடுகின்றனர். இதனையடுத்து அந்த பாதிக்கப்பட்ட நபர், இந்த விவகாரம் குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்துள்ளார் என்று தெரிகிறது.
விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள்
அந்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு நேரில் சென்று உணவினை சோதனை செய்துள்ளனர். அதனையடுத்து அந்த உணவகத்திற்கு அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் இது குறித்து மதுரை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது, "பார்சல் உணவில் பிளேடு இருந்தது குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தோம்". "அந்த ஆய்வின் பொழுது, உணவில் பிளேடு இருந்தது குறித்து விளக்கமும் கேட்டோம்". "தொடர்ந்து, அந்த உணவகத்தில் உரிய பராமரிப்புகள் ஏதும் இல்லை என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது". "இதன் காரணமாகவே உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது". "அதே போல் அடுத்த 14 நாட்களுக்குள் உணவகத்தில் உள்ள குறைகளை சரிசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளோம்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.