Page Loader
பிரதமர் பதவியேற்றவுடன் மத்திய அமைச்சரவையின் 30 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர்

பிரதமர் பதவியேற்றவுடன் மத்திய அமைச்சரவையின் 30 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர்

எழுதியவர் Sindhuja SM
Jun 09, 2024
11:22 am

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இந்நிலையில், கிட்டத்தட்ட 30 அமைச்சர்களும் இன்று அவருடன் பதவியேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. முழு அமைச்சரவையின் பலம் 78 முதல் 81 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போதைக்கு 30 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்க உள்ளனர். பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, உள்துறை, பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிவிவகாரம் ஆகிய முக்கியமான இலாகாக்களை வைத்திருக்கும் உயர்மட்ட அமைச்சர்கள் மட்டும் இன்று பதவியேற்பார்கள். அந்த உயர்மட்ட அமைச்சகங்கள் அனைத்தும் பாஜக வசம் தொடர்ந்து இருக்கும். எஃகு, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் நிலக்கரி போன்ற முக்கியமான உள்கட்டமைப்பு அமைச்சகத்தின் அமைச்சர்களும் இன்று பதவியேற்க வாய்ப்புள்ளது.

இந்தியா 

சாலைப் போக்குவரத்து மீண்டும் நிதின் கட்கரிகா?

அதிகாரப்பூர்வ பதவியேற்பு விழா இன்று இரவு 7.15 முதல் 8 மணி வரை நடைபெறும். அதாவது இது 45 நிமிடங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்கும் அமைச்சர்களுக்கு இன்று காலை முதல் அரசாங்கம் அழைப்பு விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி, தனது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையைத் தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. பெரும்பான்மை பலம் இல்லாததால், கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டிய நிலையில் பாஜக உள்ளது. அதனால் அமைச்சர் பதவி ஒதுக்கீடு நிச்சயம் அக்கட்சிக்கு சவாலாக இருக்கும். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஜே.டி.யு ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சரவை பதவியும், ஒரு அமைச்சர் பதவியும் கிடைக்க வாய்ப்புள்ளது.