அதிமுக போல் தரம் தாழந்த கருத்துக்களை முன்வைக்க விரும்பவில்லை - அண்ணாமலை பதிலடி
தமிழ்நாடு ஊழல் விவகாரம் தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர்.அண்ணாமலை அண்மையில் சர்ச்சையினை கிளப்பும் வகையில் கருத்தினை தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்துக்கு அதிமுக'வினரிடையே பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று(ஜூன்.,13)சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய அண்ணாமலைக்கு எதிராக கண்டனம் தெரிவித்து தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அதிமுக'விற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக.,மாநில தலைவர் அண்ணாமலை ,"அதிமுக'வினர் போல் மிகவும் தரம் தாழ்ந்த கருத்துக்களை முன்வைக்க நான் விரும்பவில்லை. கூட்டணிக்கட்சி விரும்பும் அனைத்தையும் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்றது" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
'தமிழக அரசியல் வரலாற்றில் நடந்ததை தான் கூறினேன்'-அண்ணாமலை
தொடர்ந்து அவர், "தற்காலிக வெற்றிக்காக தமிழக எதிர்காலம் குறித்த என்னுடைய கனவினை அடமானம் வைப்பதில் எனக்கு விருப்பமில்லை" என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள இன்றைய அறிக்கையில், "கூட்டணிக்கட்சி மற்றும் தலைவர்களை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதை யாரும் எனக்கு சொல்லவேண்டிய அவசியமில்லை. கூட்டணி தர்மம் குறித்து எனக்கு நன்கு தெரியும். தமிழக அரசியல் வரலாற்றில் நடந்ததை தான் கூறினேன்" என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர், "ஊழல் காரணமாக அரசியல் மீது நம்பிக்கை இழந்திருந்த மக்களளுக்கு மோடியின் நல்லாட்சி அந்த நம்பிக்கையினை மீட்டுக்கொடுத்துள்ளது. ஊழலற்ற அரசியல் சாத்தியம் என்பதனை மக்கள் நம்ப துவங்கியுள்ளார்கள். அவர்களது நம்பிக்கை வீண் போகாது. தமிழகத்தில் ஊழலற்ற, மக்கள்நலம் குறித்து மட்டும் கருதும் நல்லாட்சி நிச்சயம் அமையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.