LOADING...
விஜய்க்கு தூண்டில் போடும் பாஜக? 80 தொகுதிகள் மற்றும் 'துணை முதல்வர்' ஆஃபர் என தகவல்
தவெக தலைவர் விஜய்

விஜய்க்கு தூண்டில் போடும் பாஜக? 80 தொகுதிகள் மற்றும் 'துணை முதல்வர்' ஆஃபர் என தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 15, 2026
02:44 pm

செய்தி முன்னோட்டம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தை (தவெக) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்கப் பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, விஜய்யிடம் பாஜக முன்வைத்துள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:- 80 தொகுதிகள்: சட்டமன்றத் தேர்தலில் தவெக போட்டியிட சுமார் 80 தொகுதிகள் ஒதுக்கீடு. துணை முதல்வர் பதவி: தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைந்தால், விஜய்க்கு துணை முதல்வர் பதவி. பவன் கல்யாண் மாடல்: ஆந்திராவில் பவன் கல்யாண் பாணியில், ஒரு மாநிலத்தின் துணை முதல்வர் மூலமாகவே இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

நிலைப்பாடு

தவெகவின் நிலைப்பாடு

பாஜக தரப்பில் இவ்வளவு பெரிய சலுகைகள் அளிக்கப்பட்டாலும், விஜய் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தற்போது வரை தனித்துப் போட்டி என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. தனது கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டத்திலேயே, பாஜகவை சித்தாந்த எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார். பாஜக அல்லது அதிமுகவுடன் கூட்டணி என்ற செய்திகள் வெறும் வதந்திகளே என்றும், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவே தயாராகி வருவதாகவும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மாற்றங்கள்

அரசியல் மாற்றங்கள்

விஜயின் ரசிகர்கள் மற்றும் இளைஞர் ஓட்டு வங்கியைத் தன் பக்கம் இழுக்கப் பாஜக முயன்று வரும் நிலையில், ஒருவேளை இந்தக் கூட்டணி அமைந்தால் அது தமிழகத் தேர்தலின் போக்கையே மாற்றும் எனக் கருதப்படுகிறது. எனினும், தனது கட்சியின் தனித்துவத்தை இழக்க விஜய் விரும்பவில்லை என்பதால், கூட்டணி பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை. இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தவெகவுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், இது ஊடகங்கள் கிளப்பும் வதந்தி என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அமமுக தலைவர் டிடிவி தினகரனுடன் நல்லுறவு இருப்பதாகவும், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் எந்தவித மோதல் போக்கும் இல்லை என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Advertisement