தெலுங்கானா அரசியல் தலைவர் ஒவைசியின் பதவியேற்பை பாஜக புறக்கணித்ததால் பரபரப்பு
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்(AIMIM) கட்சி தலைவர் அக்பருதீன் ஓவைசியின் பதவியேற்பு விழாவை தெலுங்கானா பாஜக இன்று புறக்கணித்தது. இடைக்கால சபாநாயகராக ஓவைசியை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்எல்ஏக்கள், அவரை விட பல மூத்த தலைவர்கள் இருப்பதாக கூறி, ஓவைசியின் பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். மேலும், இது விதி மீறல் என்றும் பாஜக எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் பாஜக எம்எல்ஏக்கள் கடிதம் எழுதியுள்ளனர். விதிமுறைகளை மீறியதாகக் கூறிய பாஜக எம்எல்ஏக்கள், இடைக்கால சபாநாயகராக அக்பருதீன் ஒவைசியின் நியமனத்தை ஒத்திவைக்குமாறு ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அசாதுதீன் ஓவைசியின் சகோதரரான அக்பருதீன் ஓவைசி
அப்படி ஒத்திவைக்கவில்லை என்றால், ஓவைசியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்போம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். சமீபத்தில் தெலுங்கானா தேர்தல் முடிவடைந்தது. அதில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில், மூன்றாவது தெலுங்கானா மாநில சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடரின் இடைக்கால சபாநாயகராக AIMIM தலைவர் அக்பருதீன் ஒவைசி நேற்று நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, அக்பருதீன் ஓவைசி இன்று பதவியேற்க இருந்த நிலையில், அந்த பதவியேற்பு விழாவை பாஜக புறக்கணித்துள்ளது. அக்பருதீன் ஓவைசி, பிரபல AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.