ஆட்சி அமைக்க உரிமை கோரியது பாஜக கூட்டணி: மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து நரேந்திர மோடியின் தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. பெரும்பான்மையை தாண்டி என்டிஏ வெற்றி பெற்றதால், நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜூன் 9ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இந்தியாவில் ஆட்சியைத் தக்கவைத்து கொள்ளும் இரண்டாவது பிரதமர் மோடி ஆவார். ஜூன் 4ஆம் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. 2024 தேர்தலில் NDA கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை, என்றாலும் கூட்டணி கட்சிகளின் பலத்துடன் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்தியாவின் முடிவை நிர்ணயித்த கிங் மேக்கர் கட்சிகள்
உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ஜேடியு தலைவர்கள் லல்லன் சிங், சஞ்சய் ஜா ஆகியோர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் பெரும்பான்மையை எட்டாததால், சந்திரபாபு நாயுடுவின் டிடிபி மற்றும் நிதிஷ் குமாரின் ஜேடியு ஆகியவை கிங் மேக்கர்களாக மாறியுள்ளன. சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் எந்த கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அந்த கூட்டணி கட்சிகள் தான் இந்தியாவில் ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில், அரசாங்கத்தை ஆட்டுவிக்கும் கிங் மேக்கர்களாக உருவெடுத்துள்ள ஜேடியு, டிடிபி மற்றும் பவன் கல்யாணின் ஜன சேனா ஆகிய கட்சிகள் எழுத்துபூர்வமாக தங்கள் கூட்டணிக்கு உறுதியளித்துள்ளன.