ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
பிப்ரவரி 5ஆம் தேதி நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக அறிவித்துள்ளது.
2024 டிசம்பர் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமானார்.
இதனால், அந்த தொகுதி காலியாக இருந்த நிலையில், பிப்ரவரி 5ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் திமுக அரசின் முறைகேடுகளைக் காரணம் காட்டி அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் ஏற்கனவே தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது பாஜகவும், திமுகவின் ஆட்சியை விமர்சித்து தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
குற்றச்சாட்டு
பாஜக குற்றச்சாட்டு
ஊழல், சீர்குலைந்துள்ள சட்டம்-ஒழுங்கு, வேலையில்லா திண்டாட்டம், பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட நலிந்த பிரிவினருக்குப் பாதுகாப்பு இல்லை என்று திமுக மீது பாஜக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
திமுக தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறுவதாக குற்றம் சாட்டிய பாஜக, இந்த திமுக ஆட்சியால் அவதிப்படும் மக்கள் திராவிட மாடல் என்பதை டிசாஸ்டர் மாடல் என உரக்கக் கூற ஆரம்பித்து விட்டனர் எனத் தெரிவித்துள்ளது.
வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒரு முக்கிய தருணமாக எடுத்துக்காட்டி, திமுகவை வீழ்த்தி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) ஆட்சியை மீட்டெடுப்பதில் பாஜக கவனம் செலுத்துவதால், கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.