ஹத்ராஸ் நிகழ்வின் போது 15-16 பேர் பக்தர்கள் மீது விஷம் தெளித்ததாக போலே பாபாவின் வழக்கறிஞர் குற்றசாட்டு
செய்தி முன்னோட்டம்
ஹத்ராஸில் நடந்த மதக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 121 பேர் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, தலைமறைவான போலே பாபாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த கூட்டத்தின் போது சுமார் 15-16 மர்ம நபர்கள், கூட்டத்தினர் மீது விஷம் தெளித்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக பாபா தெரிவித்ததாக கூறியுள்ளார்.
மேலும் கூட்ட நெரிசல் ஏற்படத்துவங்கியதும், அந்த மர்ம ஆசாமிகள், இடத்தை விட்டு ஓடிவிட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த கூட்ட நெரிசல் திட்டமிடப்பட்டது என்று பாபாவின் வழக்கறிஞர் கூறியதாக நியூஸ்18 செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பாபாவின் வழக்கறிஞர், இந்த திட்டமிட்ட சதிக்கு காரணம், போலே பாபாவின் "அதிகரித்து வரும் பிரபலம்" காரணமாக இருக்கலாம் எனவும் கூறினார்.
தப்பியோடிய சதிகாரர்கள்
CCTV காட்சிகளில் பதிவான சதிகர்களின் வாகனங்கள் என வழக்கறிஞர் குற்றசாட்டு
வழக்கறிஞர் கூற்றுப்படி, "15-16 பேர் சதியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அனுமதியும் எடுக்கப்பட்டது. அனுமதியுடன் வரைபடம் இணைக்கப்பட்டது. நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சில அடையாளம் தெரியாத வாகனங்கள் இருந்தன. 10-12 பேர் விஷம் தெளித்தனர். பெண்கள் கீழே விழுந்து மூச்சு திணறல் ஏற்பட்டு பலர் இறந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். சதிகாரர்கள் அதன்பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்".
"எஸ்ஐடி மற்றும் எஸ்பி ஹத்ராஸ் ஆகியோர் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அந்த வாகனங்களை அடையாளம் காண முடியும்," என்றார்.
"சதிகாரர்கள் தப்பிக்க அந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. எங்களிடம் ஆதாரம் உள்ளது, அதை சமர்பிப்போம். இது பற்றி நான் பேசுவது இதுவே முதல் முறை," என்று அவர் மேலும் கூறினார்.