ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் 'பாரத்' பெயர்ப்பலகை
உலக தலைவர்கள் கூடி இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கைக்கு முன் 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வைத்து ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோர் இந்தியாவிற்கு வந்துள்ளனர். இதற்கிடையில், ஏற்கனவே 'இந்தியா-பாரத்' பெயர் பிரச்சனை சூடு பிடித்திருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கைக்கு முன் 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. உலக அரங்கில் இந்திய பிரதருக்கு முன் 'பாரத்' என்ற பெயர்ப்பலகை வைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
ஜி20 குழுவின் நிரந்தர உறுப்பினர் ஆனது ஆப்பிரிக்க யூனியன்
இந்நிலையில், ஜி20 மாநாட்டிற்கு உலகத் தலைவர்களை வரவேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "உலகளாவிய நம்பிக்கை பற்றாக்குறையை" நம்பிக்கையின் உறவாக மாற்ற அழைப்பு விடுத்தார். அதன் பின், 55 உறுப்பு நாடுகளைக் கொண்ட கான்டினென்டல் அமைப்பான ஆப்பிரிக்க யூனியனை(AU), G20 குழுவின் நிரந்தர உறுப்பினராக, உலகத் தலைவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி வரவேற்றார். G20 நிகழ்ச்சிகளை முறையாகத் தொடங்குவதற்கு முன், மொராக்கோ நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்தார். "காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது," என்று அவர் கூறினார்.