சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட்
சொத்துக்குவிப்பு வழக்கில், 4-வருட சிறைத்தண்டனையை நிறைவு செய்துவிட்டு, கடந்த 2021-ஆம் ஆண்டு, சசிகலாவும், இளவரசியும் விடுதலையானார்கள். ஆனால், சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், சசிகலா, விதிகளை மீறி, தனக்காக தனிப்பட்ட சொகுசு வசதிகளை செய்துதர வேண்டி, அங்கிருந்த அதிகாரிகளுக்கு, 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து, சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா விசாரணை மேற்கொண்டு, 2017-ஆம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். அப்போது, வெளியான வீடியோ ஆதாரம் ஒன்றில், சுடிதாருடன் சசிகலா ஷாப்பிங் சென்று வருவது போல பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக, பெங்களூருவில் உள்ள லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலாவும், இளவரசியும் விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால், அவர்களுக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.