நாளை பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம்: என்ன இயங்கும்? என்ன இயங்காது?
விவசாயிகள் குழுக்கள் மற்றும் கன்னட சார்பு அமைப்புகள் நாளை(செப் 26) பெங்களூரில் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இதனால், பெங்களூரின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக 175-க்கும் மேற்பட்ட அமைப்புகள் பந்த் நடத்துவதாக அறிவித்துள்ளன. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு கர்நாடகா சினிமாவுலகம், சினிமா வர்த்தகச்சபை உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகள் பந்த்க்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளதாலும், கர்நாடக முதல்வர் சித்தராமையா பந்த்தை கலைக்க அரசு முயற்சி செய்யாது என்று கூறி இருப்பதாலும், நாளை பெரும்பாலானவை செயல்படாது என்று கூறப்படுகிறது.
பெங்களூரில் நாளை எதெல்லாம் இயங்கும்?
கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின்(KSRTC) ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, பெங்களூரு பந்த்க்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், KSRTC மற்றும் BMTC ஆகிய இரண்டு சேவைகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஓலா, உபேர் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தன்வீர் பாஷா இந்த பந்த்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே, பெரும்பாலும் ஓலா, உபேர் போன்ற கட்டண டாக்ஸி சேவைகளும் இயங்காது. தனியார் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் சசிகுமார், கையில் கருப்பு பட்டை அணிந்து ஆதரவு அளிப்போம் என தெரிவித்துள்ளார். ஆனால், பல பள்ளி, கல்லூரிகளுக்கு இன்னும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோட்டல் மற்றும் உணவக சங்கங்களும் இந்த பந்த்க்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன.
பெங்களூரில் நாளை எதெல்லாம் இயங்காது?
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நாளை நகரம் முழுவதும் மெட்ரோ சேவைகளை இயக்குகிறது. பெங்களூருவில் உள்ள நம்ம மெட்ரோ ரயில் பாதையில் எந்த தடங்கலும் இருக்காது. ஆம்புலன்ஸ்கள், மருந்து வாகனங்கள் மற்றும் பிற முக்கியமான சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் போன்ற அனைத்து அவசர சேவை தொடர்பான வாகனங்களும் செயல்படும். மேலும், மருத்துவமனைகளும் மருத்துவக் கடைகளும் வழக்கம் போல் இயங்கும்.