'பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது': வெளியுறவுத்துறை அமைச்சர்
பயங்கரவாதத்தால் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், அதனால் தான் பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கடந்த 3 வாரங்களாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில், அந்த போரினால் இதுவரை 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த போரை நிறுத்துவதற்காக ஐநா சபை சமீபத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால், அந்த தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா விலகிவிட்டது. இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா நிற்பதற்கான காரணம்
நேற்று போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "நாங்கள் பயங்கரவாதத்தின் மீது வலுவான நிலைப்பாட்டை கொண்டுள்ளோம். ஏனென்றால் நாம் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். பயங்கரவாதத்தால் நாம் பாதிக்கப்டும் போது தீவிரமானது என்றும், அது பிறருக்கு நடக்கும் போது அது தீவிரமானது அல்ல என்றும் சொல்ல முடியாது. நாம் ஒரு நிலையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்." என்று கூறியுள்ளார். நடந்து வரும் இஸ்ரேல் போரில், 3 வாரத்திற்கு முன், இஸ்ரேல் மீது தான் முதலில் தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாத குழுவாக கருதப்படும் ஹமாஸ் இந்த தாக்குதலை தொடங்கியது. எனவே, பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்காக தான் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்பதாக தற்போது வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.