கடந்த நிதியாண்டில் பாதியாகக் குறைந்த வங்கி மோசடி மதிப்பு.. ரிசர்வ் வங்கியின் அறிக்கை!
செய்தி முன்னோட்டம்
கடந்த நிதியாண்டில் (2022-2023) கண்டறியப்பட்ட வங்கி மோசடிகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.
அந்த அறிக்கையில் இதற்கு முந்தைய நிதியாண்டை விட கடந்த நிதியாண்டில் கண்டறியப்பட்ட வங்கி மோசடிகளின் அளவு உயர்ந்திருப்பதாகவும், ஆனால் மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு பாதியாகக் குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.
அதாவது, கடந்த நிதியாண்டில் 13,530 மோசடி செயல்களில் ரூ.30,252 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், இதுவே இதற்கு முந்தைய நிதியாண்டில் (2021-2022) 9,097 மோசடி செயல்களின் மூலம் ரூ.59,819 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
அதற்கும் முந்தைய நிதியாண்டான 2020-2021 நிதியாண்டில் 7,338 மோசடி செயல்களின் மூலம் ரூ.1,32,389 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி
குறையும் மோசடி மதிப்பு:
2020-21 நிதியாண்டை விட 2021-22 நிதியாண்டில் மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 55% குறைந்திருந்ததாகவும், 2021-22 நிதியாண்டை விட கடந்த நிதியாண்டில் மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 49% குறைந்திருப்பதாகவும் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.
சிறு மதிப்பிலான நிறைய டிஜிட்டல் மோசடிகள் நடைபெற்றதாகவும், குறைந்த அளவிலான அதிக மதிப்பு கொண்ட கடன் மோசடிகள் நடைபெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.
கடந்த நிதியாண்டில் கண்டறியப்பட்ட மோசடிகளில் ரூ.21,125 கோடி மதிப்பிலான 3,405 மோசடிகள் பொதுத்துறை வங்கிகளிலும், ரூ.8,727 கோடி மதிப்பிலான 8,932 மோசடிகள் தனியார் வங்கிகளிலும் நடைபெற்றிருக்கின்றன.
இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது மோசடி செய்யப்பட்ட மதிப்பு தானே தவிர, வங்கிகள் இழந்த மதிப்பு அல்ல என்பதையும் குறிப்பிட்டிருக்கின்றனர்.