LOADING...
பிரபல கோயிலில் விஐபி தரிசனம் ரத்து: உச்ச நீதிமன்றம் நியமித்த உயர்நிலைக் குழு அதிரடி முடிவு
மதுரா ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயிலில் விஐபி தரிசன முறை ரத்து

பிரபல கோயிலில் விஐபி தரிசனம் ரத்து: உச்ச நீதிமன்றம் நியமித்த உயர்நிலைக் குழு அதிரடி முடிவு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 12, 2025
07:56 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான மதுரா ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயிலில், விஐபி தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது. இனி அனைத்து பக்தர்களும் வரிசையில் நின்று தரிசனம் செய்ய வேண்டும். இதன் மூலம், பக்தர்கள் மத்தியில் சமத்துவத்தை உறுதிப்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, விஐபி அனுமதிச் சீட்டு முறை உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் ஒழுங்குபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு

பாதுகாப்புப் பணியில் முன்னாள் ராணுவ வீரர்களை நியமிக்க திட்டம்

கோயிலின் பாதுகாப்பிற்காகப் பாதுகாப்புப் பணியாளர்களுக்குப் பதிலாக, முன்னாள் இராணுவ வீரர்கள் அல்லது தொழில்முறை பாதுகாப்பு நிறுவனங்கள் நியமிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் மூன்று மணி நேரமும், குளிர்காலத்தில் இரண்டு மணி நேரம் நாற்பத்தைந்து நிமிடமும் கூடுதலாகத் தரிசனத்திற்காகக் கோயில் திறந்திருக்கும். இது தவிர, ஆன்லைன் நேரடி ஒளிபரப்பு மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. கடந்த 2013-16 ஆம் ஆண்டு வரையிலான நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்துச் சிறப்பு தணிக்கை நடத்தவும் குழு முடிவு செய்துள்ளது. மேலும், கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களின் மதிப்பீடும் செய்யப்படும்.