Page Loader
பெங்களூரில் ரூ.12.51 கோடி மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி மேலாளர் உள்ளிட்ட நான்கு பேர் கைது
பெங்களூரில் ரூ.12.51 கோடி மோசடி செய்த தனியார் வங்கி மேலாளர் கைது

பெங்களூரில் ரூ.12.51 கோடி மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி மேலாளர் உள்ளிட்ட நான்கு பேர் கைது

எழுதியவர் Sekar Chinnappan
Dec 30, 2024
12:30 pm

செய்தி முன்னோட்டம்

டிரீம் பிளக் பே டெக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (CRED) நிறுவனத்திடம் இருந்து ரூ.12.51 கோடி மோசடி செய்ததாக தனியார் வங்கி மேலாளர் உட்பட 4 பேரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். அதன் கணக்குகளில் இருந்து அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை மேற்கோள் காட்டி, நிறுவனத்தின் இயக்குனர் நவம்பர் மாதம் புகார் அளித்தபோது இந்த மோசடி நடவடிக்கை வெளிப்பட்டது. பெங்களூரில் உள்ள ஆக்சிஸ் வங்கியின் இந்திராநகர் கிளையில் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் ஐடிகள் மற்றும் தொடர்பு எண்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளை குற்றம் சாட்டப்பட்டவர் அணுகியது விசாரணையில் தெரியவந்தது. போலியான கார்ப்பரேட் இன்டர்நெட் பேங்கிங், கையெழுத்துகள் முத்திரைகளைப் பயன்படுத்தி, அவர்கள் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உள்ள 17 கணக்குகளுக்குத் தொகையை மாற்றியுள்ளனர்.

கைது

குற்றவாளிகளை கைது செய்தது பெங்களூர் காவல்துறை

பெங்களூர் காவல்துறை விசாரணையை முன்னெடுத்தனர். அவர்கள் குஜராத்தைச் சேர்ந்த ஆக்சிஸ் வங்கி மேலாளர் உட்பட 4 பேரை கைது செய்தனர். மோசடி கணக்குகளில் 55 லட்சம் முடக்கப்பட்ட நிலையில், இதுவரை ரூ.1.28 கோடி மீட்கப்பட்டுள்ளதாக நகர காவல் ஆணையர் பி.தயானந்தா தெரிவித்தார். குற்றத்திற்கு பயன்படுத்திய 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மோசடியில் ஈடுபட்ட மற்ற சந்தேக நபர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, முக்கியமான கார்ப்பரேட் தரவுகளைப் பாதுகாப்பது மற்றும் வங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.