கணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில் தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம்
விமானத்தில் இருந்த தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாங்காக் நோக்கிச் சென்று கொண்டிருந்த லுஃப்தான்சா விமானம் இன்று டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது. லுஃப்தான்சா விமானம்-எண் LH772, முனிச்சிலிருந்து(ஜெர்மனி) பாங்காக்(தாய்லாந்து) நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணித்த ஒரு ஜெர்மனியருக்கும் அவரது தாய்லாந்து மனைவிக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அவரது மனைவி, தன் கணவரின் நடத்தையால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி விமானியின் உதவியை நாடினார். இதனையடுத்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை எச்சரித்த விமானிகள், முதலில் பாகிஸ்தான் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரினர். ஆனால் அது மறுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க விமானிகள் அனுமதி கேட்டனர்.
ஜெர்மன் தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ள இந்திய அதிகாரிகள்
அந்த விமானம் டெல்லியில் தரையிறங்கியதும், தகராறு செய்த கணவர் அங்கிருந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் ஜெர்மன் தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ள நிலையில், அந்த நபர் விமான நிலைய அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார். டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படை-CISF அதிகாரிகள் இன்னும் சம்பவ இடத்தில் உள்ளனர். அந்த நபரை இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகளிடம் ஒப்படைக்க வேண்டுமா அல்லது ஜெர்மனிக்கு திருப்பி அனுப்ப வேண்டுமா என்பது குறித்து அதிகாரிகள் விவாதித்து வருகின்றனர். லுஃப்தான்சா விமானம் அதன் டயர்கள் குளிர்ந்தவுடன் தாய்லாந்திற்கு மீண்டும் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.