ஆசிரியராக தொடங்கி, அம்மாவாக மாறிய பங்காரு அடிகளார்
மேல்மருவத்தூர் என்றாலே அது ஆதிபராசக்தி கோவில் என்றாகி விட்டது. அந்த கோவிலின் பிரசித்திக்கு முக்கிய காரணம் பங்காரு அடிகளார். 'அம்மா' என்று அழைக்கப்படும் இவர், தன்னுடைய ஆரம்ப காலத்தில் பள்ளி ஆசிரியராக இருந்தவர். உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டிருக்கும் பங்காரு அடிகளாரின் இயற்பெயர் சுப்பிரமணி. 1941 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கரும்பாக்கம் கிராமத்தில் பிறந்த இவர், செங்கல்பட்டு அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில், ஆசிரியர் பயிற்சியை முடித்தவர். அதனை தொடர்ந்து சோத்துப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.
சுப்பிரமணி, 'அம்மா'-வாக மாறினார்
1966 ஆம் ஆண்டு அவர்கள் வசிக்கும் இடமருகே வீசிய புயல் காற்றால், அவர் வீட்டின் பின்புறம் இருந்த வேப்பமரத்தின் அடியில் இருந்து ஒரு சுயம்பு உருவானதாக சொல்லப்படுகிறது. அதையே கோயிலாக நிர்மாணித்தார் சுப்பிரமணி என்கிற பங்காரு அடிகளார். அதன்பின்னர், உள்ளூர் மக்களுக்கு குறி சொல்லி வந்த அடிகளாரின் புகழ் மெதுவாக சுற்றுவட்டங்களில் பரவ ஆரம்பித்தது. பின்னர், 1970 களில் மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை தொடங்கினார். தொடர்ந்து தான், ஆதிபராசக்தியின் அம்சம் என கூறினார். அதன் பின்னரே, சுப்பிரமணி என்கிற பங்காரு அடிகளார், பக்தர்களால் 'அம்மா' என்று அழைக்கப்பட்டார்.
அறக்கட்டளைகளை நிறுவிய பங்காரு அடிகளார்
தமிழகம் எங்கும் செவ்வாடை பக்தர்கள், இவரின் அருளாசி கிடைக்க, மேல்மருவத்தூர் நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். அதற்கேற்ப கோவிலின் வளர்ச்சிக்காக நன்கொடைகளை குவிந்தன. பங்காரு அடிகளார் இந்த கொடைகள் மூலம், அறக்கட்டளையை நிறுவி, பல கல்வி நிலையங்களும், மருத்துவமனைகளையும் கட்டியுள்ளார். கடந்த சில காலம் முன்னர் வரிஏய்ப்பு செய்ததாக இந்த அறக்கட்டளையில் அதிகாரிகள் சோதனை செய்தது, அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 85 வயதான பங்காரு அடிகளார், இன்று மாரடைப்பால் காலமானார். இரு ஆண்டுகளுக்கு முன்னரே, தான் நிறுவிய சித்தர் பீடம் அருகே தனக்கு சமாதி கட்டி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது இறுதி சடங்கு நாளை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது