
இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம்
செய்தி முன்னோட்டம்
போர் பதட்டத்தால் 12 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்த அட்டாரி-வாகா எல்லையில் நடைபெறும் கொடியிறக்க நிகழ்வு, இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மே 7 ஆம் தேதி பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவிய பதட்ட சூழ்நிலையால், அட்டாரி-வாகா எல்லை தற்காலிகமாக மூடப்பட்டு, மே 8 ஆம் தேதி முதல் கொடியிறக்க விழாவும் இடைநிறுத்தப்பட்டது.
இதனால், நாள்தோறும் நடைபெறும் பாரம்பரிய விழாவை காண வந்த பொதுமக்கள் திரும்ப அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், பாதுகாப்பு சூழ்நிலைகள் சீரடைந்ததை அடுத்து, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள அட்டாரி-வாகா எல்லை மற்றும் பெரோஸ்பூரில் உள்ள ஹூசைனிவாலா எல்லையில் இன்று முதல் விழா மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள்
எச்சரிக்கை காரணமாக விதிமுறைகளில் மாற்றங்கள் அறிவிப்பு
விழா நடைபெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டாலும், எச்சரிக்கைக் காரணங்களால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நிகழ்வின் போது பொதுமக்கள் மற்றும் இரு நாடுகளின் ராணுவ வீரர்கள் வழக்கம்போல் கைகுலுக்குவதை தவிர்க்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.
மேலும், எல்லை வாயில்கள் மூடப்பட்ட நிலையில் விழா நடைபெறும். இந்த கொடியிறக்க விழா 1959ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகு முதன்முறையாக 12 நாட்களுக்கு நிறுத்தம் செய்யப்பட்ட இந்த விழா, இன்று மீண்டும் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.