2026 தேர்தல் கருத்துகணிப்புகள்: புதுச்சேரியில் இளைஞர்களின் வாக்கை அள்ளிய TVK; தமிழகத்தில் மீண்டும் ஸ்டாலின்?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற்று வந்த சட்டப்பேரவைத் தேர்தல்களின் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 29, 2026) மாலை 6 மணியுடன் முழுமையாக நிறைவடைந்தது. ஜனநாயகத் திருவிழாவின் ஒரு பகுதியாக, வாக்காளர்களின் மனநிலை என்ன என்பதைத் தெரிவிக்கும் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இதில் முன்னணி கணிப்பு நிறுவனமான ஆக்சிஸ் மை இந்தியா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கணித்துள்ளது.
தமிழகம்
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியை கைப்பற்றுகிறது
Exit Poll முடிவுகள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கணிக்கின்றன. குறிப்பாக மேட்ரைஸ் (Matrize) மற்றும் பீப்பிள்ஸ் பல்ஸ் (People's Pulse) ஆகிய நிறுவனங்களின் முடிவுகள் திமுகவிற்கு சாதகமாக அமைந்துள்ளன. கருத்துக்கணிப்பின்படி, தமிழகத்தில் ஆட்சியைத் தக்கவைக்கத் தேவையான பெரும்பான்மையை திமுக கூட்டணி எளிதாகப் பெறும் எனத் தெரிகிறது. திமுக கூட்டணி (SPA): 122 முதல் 132 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளது. அதிமுக கூட்டணி (NDA): 87 முதல் 100 இடங்கள் தமிழக வெற்றிக் கழகம் (TVK): நடிகர் விஜய்யின் புதிய கட்சி 10 முதல் 12 இடங்களை பிடித்து தனது அரசியல் கணக்கைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TVK
பீப்பிள்ஸ் பல்ஸ்: விஜய்க்கு அதிக இடங்கள்?
பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனத்தின் எக்சிட் போல் முடிவுகள், திமுகவிற்கு இன்னும் கூடுதலான இடங்களைக் கணித்துள்ளன. அதே சமயம், விஜய்யின் TVK கட்சிக்கு இரட்டை இலக்க இடங்களில் பெரிய முன்னேற்றம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது. திமுக கூட்டணி 125 முதல் 145 இடங்களைப் பெற்று ஒரு கம்பர்டபிள் மெஜாரிட்டியை எட்டும். அதிமுக தலைமையிலான கூட்டணி 65 முதல் 80 இடங்களுக்குள் சுருங்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. TVK கட்சி 18 முதல் 24 இடங்கள் வரை வென்று, தமிழக அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என இந்த நிறுவனம் கணித்துள்ளது.
புதுச்சேரி
புதுச்சேரி: வயது வாரியான வாக்கு பிரிப்பு
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் கடும் போட்டி நிலவினாலும், ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பின்படி NDA கூட்டணியே முன்னிலையில் உள்ளது. * NDA கூட்டணி 40% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ்-திமுக கூட்டணி 30% வாக்குகளையும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK+) 17% வாக்குகளையும் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சுவாரஸ்யமான ஒரு போக்கு காணப்படுகிறது. 18 முதல் 29 வயதுடைய இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் TVK+ கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். ஆனால், 40 வயதிற்கு மேற்பட்ட மற்றும் முதிய வாக்காளர்கள் மத்தியில் NDA கூட்டணி 52% வாக்குகளுடன் பலமாக உள்ளது.
அசாம்
அசாம்: பாஜக கூட்டணியின் அசுர பலம்
அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில், பாஜக தலைமையிலான கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. NDA கூட்டணி 88 முதல் 100 இடங்களை கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணி வெறும் 24 முதல் 36 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. NDA கூட்டணி 48% வாக்கு சதவீதத்தைப் பெறும் என்றும், காங்கிரஸ் 38% வாக்குகளைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. முக்கிய மாற்றம்: கிராமப்புறங்களில் காங்கிரஸ் 7% கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தாலும், நகர்ப்புற மற்றும் இதர பகுதிகளில் பாஜகவின் ஆதிக்கம் அதனைச் சமன் செய்துள்ளது. 2021 தேர்தலை விட இம்முறை சிறிய கட்சிகள் தங்கள் வாக்கு வங்கியை இழந்துள்ளன.