அசாம் சட்டமன்றத்தில் 'பலதார மணத் தடை' மசோதா நிறைவேற்றம்: முக்கிய அம்சங்கள் என்ன?
செய்தி முன்னோட்டம்
அசாம் மாநிலத்தில் பலதார மண நடைமுறைகளைத் தடை செய்யும் வகையில் 'அசாம் பலதார மணத் தடை மசோதா, 2025' வியாழக்கிழமை (நவம்பர் 27) மாநிலச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஒப்புதலுக்காக இந்த மசோதா இப்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகுப் பேசிய முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, 2026ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) கொண்டு வரப்படும் என்று உறுதி அளித்திருந்தார். இந்நிலையில், தற்போது எந்த மதமாக இருந்தாலும் பலதார மணம் செய்வதை தடை செய்வதற்கான மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
மசோதாவின் முக்கிய விதிகள்
இந்த மசோதா பலதார மணத்தைக் குற்றமாக அறிவிக்கிறது. அதன் முக்கிய அம்சங்கள்
பலதார மணம்: முதல் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். தகவலை மறைத்தல்: ஏற்கனவே திருமணமானவர், அதை மறைத்து மறுமணம் செய்தால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். மறுபடியும் குற்றம்: ஒரு நபர் மீண்டும் பலதார மணத்தில் ஈடுபட்டால், ஒவ்வொரு முறைக்கும் விதிக்கப்பட்ட தண்டனை இரட்டிப்பாகும். திருமணத்தை நடத்துபவர்: தடை செய்யப்பட்ட பலதார மணத்தை தெரிந்தே நடத்தி வைப்பவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ₹1.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
விலக்கு
சட்டம் யாருக்கு பொருந்தாது?
இருப்பினும், இந்த மசோதா அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணைப் பகுதிகளுக்கும், பழங்குடியினருக்கும் (Scheduled Tribes) பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இஸ்லாமிய நாடான துருக்கியில்கூட பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளது என்றும், இது இஸ்லாமிற்கு எதிரான மசோதா அல்ல என்றும் வாதிட்டார்.