தொழில்நுட்பத்தில் பாய்ச்சல்: இந்தியாவின் Gen Z இளைஞர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
செய்தி முன்னோட்டம்
ஹைதராபாத்தில் உள்ள ஸ்கைரூட் (Skyroot) என்ற இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இன்ஃபினிட்டி வளாகத்தை வியாழக்கிழமை (நவம்பர் 27) காணொலி மூலம் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் விண்வெளித் துறையில் இளம் தலைமுறையினரின் பங்களிப்பைப் பெரிதும் பாராட்டினார். அரசு விண்வெளித் துறையைத் திறந்து விட்டபோது, இளையோர் (Gen Z) அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
ஸ்டார்ட்அப்
300க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை ஏவும் திறன் கொண்ட ஸ்கைரூட்டின் முதல் ஆர்பிட்டல் ராக்கெட்டான விக்ரம்-I ஐ வெளியிட்ட பிரதமர், அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளிச் சீர்திருத்தங்கள் குறித்துப் பேசினார். "இன்று, 300 க்கும் மேற்பட்ட இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், இந்தியாவின் விண்வெளி எதிர்காலத்திற்குப் புதிய நம்பிக்கையை அளித்து வருகின்றன. இதில் பெரும்பாலானவை Gen Z எனப்படும் இளம் பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் சிறிய அளவிலான குழுக்களாகத் தொடங்கப்பட்டவை" என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.
கண்டுபிடிப்புகள்
ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புகள்
புதிய உந்துவிசை அமைப்பு, கூட்டுப் பொருட்கள், ராக்கெட் நிலைகள் மற்றும் செயற்கைக்கோள் தளங்கள் போன்ற சில ஆண்டுகளுக்கு முன் கற்பனை செய்ய முடியாத பகுதிகளில் இந்திய இளைஞர்கள் பணியாற்றி வருவதாக மோடி கூறினார். சுமார் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கைரூட் இன்ஃபினிட்டி வளாகம், ஏவுதல் வாகனங்களை வடிவமைத்தல், மேம்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் சோதிக்கும் பணியைச் செய்யும். இதன் மூலம் மாதத்திற்கு ஒரு ஆர்பிட்டல் ராக்கெட் வரை கட்டும் திறன் கொண்டது. இந்த வளாகம் இந்தியாவின் புதிய சிந்தனை, கண்டுபிடிப்பு மற்றும் பெரிய இளைஞர் சக்தியின் பிரதிபலிப்பு என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.