5 வருட குடியரசு தலைவர் ஆட்சி: ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல் எப்போது
ஜம்மு காஷ்மீர் குடியரசு தலைவர் ஆட்சிக்கு கீழ் வந்து 5 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. இந்தியாவிலேயே இதுதான் இரண்டாவது மிக நீண்ட குடியரசு தலைவர் ஆட்சியாகும். கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு மிகப்பெரும் அரசியல் பிரச்சனைகள் ஜம்மு காஷ்மீரில் நடந்தது. அப்போது தேர்தலில் வெற்றி பெற்ற மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியும்(PDP) பாஜகவும் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தில் உடன்பட்ட பிறகு கூட்டணி அமைத்தன. ஆனால், PDP தலைமையிலான கூட்டணிக்கான ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதையடுத்து, 2018இல் இந்த கூட்டணி சரிந்தது. ஆகஸ்ட் 2019இல், அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியது.
ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் தழைக்குமா?
அதற்கு பிறகு, ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை. யூனியன் பிரதேசங்களில் ஆளும் கட்சிகளுக்கு பொதுவாக முழு அதிகாரமும் வழங்கப்படாது. யூனியன் பிரதேசங்களுக்கான உண்மையான அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருக்கும். எனினும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஆயிர கணக்கான மக்கள் சட்டசபை தேர்தலில் ஒட்டு போட ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏனெனில், வாக்குக்குரிமைக்காக வேறு எந்த இடமும் காஷ்மீர் அளவுக்கு போராடியதில்லை. 1990ஆம் ஆண்டு முதல் ஜனநாயகம் மற்றும் வாக்குரிமைக்காக போராடிய ஆயிரக்கணக்கான காஷ்மீர் மக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஜம்மு-காஷ்மீர் பகுதிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எந்த இடத்தில் மனித உரிமைகள் அதிகம் பாதிக்கப்பட்டதோ அதே இடத்தில் ஜனநாயகம் தழைக்குமா என்பது தான் தற்போது மிகப்பெரும் கேள்வியாக இருக்கிறது.