சிறிய சிற்றுண்டிக் கடையாகத் திறக்கப்பட்ட ரூ.4000 கோடி மதிப்பை எட்டிய ஹால்டிராம்: பகுதி-2
1960-களில் ஹால்டிராம் நிறுவனத்தின் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர், கங்கா பிஷான் அகர்வாலின் பேரன் ஷிவ் கிஷான் அகர்வால். அகர்வால் குடும்பம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, பிக்கானேர், கொல்கத்தா மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களுக்கு இடம் பெயர்கிறது. பிக்கானேரில் மட்டும் விற்கப்பட்டு வந்த ஹால்டிராம் குடும்பத்தின் புஜியாவானது தற்போது இந்தியாவில் மூன்று மாநிலங்களில் உள்ள மூன்று ஊர்களுக்கு பரவலாக்கப்படுகிறது. பிக்கானேரிலும், கொல்கத்தாவிலும் புஜியாவின் விற்பனை அமோகமாகச் சென்று கொண்டிருக்க, மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் தொடங்கப்பட்ட புஜியா வணிகம் அந்தளவிற்கு கைகொடுக்கவில்லை. மகாராஷ்டிராவில் புஜியா அந்தளவிற்கு விரும்பப்படும் சிற்றுண்டியாக அப்போது இருக்கவில்லை. எனவே, இந்த நகரில் மட்டும் தடுமாற்றத்தைக் கண்டது ஹால்டிராமின் புஜியா விற்பனை.
அடுத்த கட்டப் பாய்ச்சல்:
ஹால்டிராமின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு, தற்போது இருக்கும் நிலைக்கு வித்திட்டவர் மனோகர் லால் அகர்வால். 1973-ல் ஹால்டிராமின் வணிகத்தில் பங்கெடுத்த அவர், பிக்கானேர், கொல்கத்தா, நாக்பூரைக் கடந்து டெல்லியிலும் ஹால்டிராமின் புதிய கிளையைத் தொடங்கினார். தங்கள் தயாரிப்புகளை அனைவரின் விருப்பத்திற்கும். விற்பனைக்கும் ஏற்றவாறு பேக்கிங் செய்வது மற்றும் இந்தியாவில் மேலும் பல நகரங்களில் கிளைகளை பரப்புவது தான் மனோகர் லாலின் திட்டம். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மூன்று தலைமுறைகளாக வளர்த்தெடுக்கப்பட்ட ஹால்டிராம் நிறுவனமானது, தற்போது 80-க்கும் மேற்பட்ட நகரங்களில் கிளைபரப்பி, $3 பில்லியன் சந்தை மதிப்பை எட்டியிருக்கிறது. உலகின் முன்னணி சிற்றுண்டி தயாரிப்பு நிறுவனங்களுக்கே கடுமையான போட்டியாக இருந்து வருகிறது சிறிய கடையாக தொடங்கப்படு முன்னணி நிறுவனமாக வளர்ந்த ஹால்டிராம்.