டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு தள்ளுபடி: அவரது கைது செல்லுபடியாகும் என நீதிமன்றம் அறிவிப்பு
மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் தன்னை அமலாக்க இயக்குநரகம்(ED) கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்கும் போது, "அமலாக்க இயக்குனரகம் பகிர்ந்துள்ள தகவலின்படி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றவர்களுடன் இணைந்து சதி செய்திருக்கிறார். மேலும், குற்றத்தின் வருவாயைப் பயன்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மதுபானக் கொள்கை ஊழலில் தனிப்பட்ட முறையில் கெஜ்ரிவால் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு
தற்போது ரத்து செய்யப்பட்ட மதுபானக் கொள்கையை வகுப்பதிலும், கிக்பேக் கோருவதிலும் கெஜ்ரிவால் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டதாகவும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பெறப்பட்ட பணத்தை, கோவா மற்றும் பஞ்சாப் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்தியதாகவும், டெல்லி முதல்வர் 'சவுத் குரூப்' நிறுவனத்திடமிருந்து பல கோடி ரூபாய் கிக்பேக்காகப் பெற்றதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் (ED) மார்ச் 21 அன்று கைது செய்தது. மதுபான ஊழல் செய்த முக்கிய சதிகாரர்களில் கெஜ்ரிவாலும் ஒன்று என்று அமலாக்க இயக்குனரகம் குற்றம் சாட்டியுள்ளது.