பாஜகவில் சேர சொல்லி அக்கட்சி தன்னை கட்டாயப்படுத்துவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
பாஜகவில் சேர சொல்லி தான் கட்டாயப்படுத்தப்படுவதாக இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பணம் கொடுத்து பாஜக வாங்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைக்கு மத்தியில் அவர் இந்த குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். "எங்களுக்கு எதிராக அவர்கள் என்ன சதி வேண்டுமானாலும் செய்யலாம்; நானும் உறுதியாக இருக்கிறேன். நான் வளைந்து கொடுக்கப் போவதில்லை. என்னை பாஜகவில் சேரச் சொல்கிறார்கள். ஆனால் நான் ஒருபோதும் பாஜகவுக்கு செல்ல மாட்டேன் என்று சொன்னேன். பாஜகவில் ஒருபோதும் சேரமாட்டேன். இல்லவே இல்லை" என்று டெல்லியின் ரோகினியில் ஒரு பள்ளிக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
'தேசிய பட்ஜெட்டில் 4 சதவீதத்தை மட்டுமே பள்ளிகளுக்கு பாஜக செலவிடுகிறது'
அந்த நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால், டெல்லி அரசு ஒவ்வொரு ஆண்டும் தனது பட்ஜெட்டில் 40 சதவீதத்தை பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செலவிடுகிறது என்றும் ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசு தேசிய பட்ஜெட்டில் 4 சதவீதத்தை மட்டுமே பள்ளிகளுக்கு செலவிடுகிறது என்றும் கூறினார். சிறையில் அடைக்கப்பட்ட தனது ஆம் ஆத்மி சகாக்களான மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்திர ஜெயின் பற்றியும் அவர் குறிப்பிட்டு பேசினார். "இன்று எல்லா ஏஜென்சிகளும் எங்களை குறிவைக்கின்றன. மணிஷ் சிசோடியாவின் தவறு, அவர் நல்ல பள்ளிகளைக் கட்டினார். சத்யேந்தர் ஜெயின் தவறு, அவர் நல்ல மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளைக் கட்டினார் என்பது மட்டுமே." என்று டெல்லி முதல்வர் கூறினார்.